ஐகோர்ட் உத்தரவிட்டும் அமைதி காக்கும் ஸ்டாலின் | Minister Ponmudi | Controversy | Protest | stalin
சென்னையில் கடந்த 6ம் தேதி நடந்த விழா ஒன்றில் பேசிய பொன்முடி, பெண்கள், சைவம், வைணவ சமயங்கள் குறித்து மிகவும் கொச்சையாக பேசியது சர்ச்சையானது. குறிப்பாக பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. திமுக தலைவர்களில் ஒருவரான கனிமொழியே, அமைச்சரை கண்டித்து அறிக்கை விட்டார். எதிர்ப்பு குரல் எழுந்ததால் பொன்முடியை திமுகவின் துணை பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து நீக்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்குவார் என்று எதிர்பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பொன்முடியை இன்னும் அமைச்சரவையில் வைத்துள்ள ஸ்டாலின் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அமைச்சரின் ஆபாச பேச்சுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, அதிமுக மகளிரணி, 16ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தொடர்ந்து, தமிழகம் முழுதும் நேற்று அதிமுக சார்பில் கண்டன போராட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் திரண்டு பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவை மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பிலும், மயிலாடுதுறையில், இந்து புரட்சி முன்னணி சார்பிலும் பொன்முடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது. பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் வலியுறுத்தி உள்ளார். மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோரும், பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் சென்னை ஐகோர்ட்டும், பொன்முடியை கடுமையாக கண்டித்தது. இவ்வளவு ஆபாசமாக வேறு யாராவது பேசி இருந்தால், போலீசார் எத்தனையோ வழக்குகள் போட்டிருப்பர். அமைச்சர் என்றால் விதிவிலக்கா? யாருமே புகார் அளிக்காவிட்டாலும், பொன்முடி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அரசு அனுமதி தராததால் போலீஸ் அமைதியாக இருக்கிறது. ஐகோர்ட்டே உத்தரவிட்டும், முதல்வர் அனுமதி அளிக்காமல் இருக்க என்ன காரணம் என்று, பல ஊகங்கள் உலா வருகின்றன. பொன்முடி மட்டுமல்ல, பல அமைச்சர்கள் அடிக்கடி நாவடக்கம் இல்லாமல் பேசி, சர்ச்சையில் சிக்குகின்றனர். இப்போது பொன்முடி மீது நடவடிக்கை எடுத்தால், அடுத்து வரிசையாக பல அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரலாம் என்பதால், அவர் தயங்குவதாக கூறப்படுகிறது.