அதிமுக - பாஜ தோல்வி கூட்டணியே ஊழல் தான் | M.K.Stalin | DMK | ADMK - BJP alliance | Amit shah |
நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக - பாஜ கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார். இந்நிலையில் அதிமுக - பாஜ கூட்டணி என்பது தோல்வி கூட்டணி என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் அவர்களுக்கு தொடர் தோல்வியை கொடுத்திருந்தும், இதே தோல்வி கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் அமித்ஷா. சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி, அவரது பதவிக்குத் தகுதியானதாக இல்லை. திமுகவையும், திமுக அரசையும், என்னையும் விமர்சிக்க மட்டுமே அந்த பத்திரிகையாளர் சந்திப்பை அமித்ஷா பயன்படுத்தி இருக்கிறார் என்பதை பார்த்தவர்கள் அறிவார்கள். உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்திருக்கும் ஓர் அமைச்சர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இது மணிப்பூர் அல்ல, தமிழகம் தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். ஒன்றரை ஆண்டுகளாக 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை பாஜ ஆண்டது. அங்கே போய் அமைதியை நிலைநாட்ட முடியாத உள்துறை அமைச்சர், அமைதியான மாநிலத்துக்குள் வந்து அமைதியைக் குலைக்கப் பார்க்கிறார். சட்டம் ஒழுங்கு மோசம் என்று பொறுப்பற்ற வகையில் பீதியைக் கிளப்பிச் சென்றிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி என்று அறிவித்த மேடையில் ஊழலைப் பற்றி அவர் பேசியதை பார்த்து தமிழக மக்கள் சிரிக்கவே செய்வார்கள். ஊழலுக்காக இரண்டு முறை முதல்வர் பதவியை விட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையும் பெற்றவர். அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது ஊழல் என்பது பேசத் தகுதியான வார்த்தையா? இன்றைய அதிமுக பொறுப்பாளர்களின் உறவினர் குடும்பங்களை சுற்றியும் மத்திய புலனாய்வு அமைப்புகள் 2 சோதனைகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பாஜ தலைமையை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் உணராதவர்கள் அல்ல தமிழக மக்கள். இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழகத்தை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள். பதவி மோகத்தில், தமிழகத்தின் சுயமரியாதையை - தமிழக உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழகத்தை பாழாக்கியவர்தான் பழனிசாமி என்பதை யாரும் மறக்கவில்லை. பழைய கொத்தடிமை கூடாரமான அதிமுகவின் தலைமையை மிரட்டி பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பா.ஜ நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜ தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள். சுயமரியாதையின்றி டெல்லியில் மண்டியிட்டு தமிழகத்தை அடகு வைக்கும் துரோக கூட்டத்திற்கு தமிழக மக்கள் சரியான பதில் கொடுப்பார்கள்.