பாகிஸ்தானை அடித்தால் காங்கிரஸ், சமாஜ்வாதிக்கு வலிக்கிறது: மோடி Modi Speech at UP| Opertion Sindhoo
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், 2,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் மோடி, பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். சாலை, ரயில்வே, மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு மேம்பாடு என பல்வேறு துறைகளில் முடிக்கப்பட்ட திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில், கங்கை படித்துறைகளில் செய்யப்பட்ட புனரைமப்பு பணிகள் முடிந்ததை அடுத்து, பளபளக்கும் படித்துறைகள் திறந்து வைக்கப்பட்டன. அத்துடன் கங்கை நதிக்கரையில் செய்யப்பட உள்ள சுற்றுலா துறை சார்ந்த மேம்பாட்டு பணிகள் இன்று துவங்கப்பட்டன. ஹிந்தி மொழி கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான முன்ஷி பிரேம்சந்த் வாழ்ந்த பரம்பரை வீட்டை புனரமைக்கும் பணி, பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்களை புனரமைத்து அழகுபடுத்தும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், மாநிலம் முழுதும் பல்வேறு குளங்களை துார்வாருதல், சுத்திகரிப்பு பணிகளும் துவங்கி வைக்கப்பட்டன. நகரமயமாக்களால் காற்று மாசுபாடு ஏற்படுவதை தடுக்கும் வகையில், முக்கிய நகரங்களில் மியாவாக்கி காடுகள் அமைக்கும் திட்டமும் துவங்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட 53 பள்ளி கட்டங்கள், மாணவர்களுக்கான நலத்திட்டங்களும் துவங்கப்பட்டன. கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 20வது தவணையாக 20,500 கோடி ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணியை பிரதமர் மோடி இன்று நிறைவேற்றினார். இதன் மூலம், நாடு முழுதும் 9.7 கோடி விவசாயிகள் பலன் அடைவர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கைய பார்த்து உலக நாடுகள் வியந்தன. நம் ராணுவ பலம் உலகிற்கு எடுத்துரைக்கப்பட்டது. அதில் உள்நாட்டு உற்பத்தி பொருட்களின் பங்கு மிக அதிகம். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் கதறி அழுவதை பார்த்து, இங்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் அழுகின்றனர். பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் ஏன் குறிப்பிட்ட நாளில் கொல்லப்பட்டனர் என்கின்றனர். இதற்காக நாள் குறித்து செயல்பட முடியுமா? இவர்களின் பேச்சு முட்டாள்தனமாக உள்ளது. இவர்களின் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகள் தப்ப விடப்பட்டனர். அப்படித் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கொன்று குவித்த ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விவசாயிகள் நலன் கருதி கிசான் சம்மான் யோஜனா செயல்படுத்தப்படுகிறது. முந்தைய அரசுகள் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் நாங்கள் குறிப்பிட்ட சமயத்தில் அவர்களின் வங்கிக் கணக்கில் நிதியை வரவு வைத்து வருகிறோம். இதனால், கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் அடைய முடிகிறது. உலக நாடுகள் தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக வைக்கவும், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் முயற்சி மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா, உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உயர உள்ளது. அந்த பாதையை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம். இந்திய பொருளாதாரத்தை காப்பதிலும், உயர்த்துவதிலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கடமை உள்ளது. கட்சி பேதம் கடந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சுயசார்பு பொருளாதாரம் மிக அவசியம். நம் பொருளாதாரத்தை உயர்த்த, நாம் உள்நாட்டு பொருட்களை அதிகம் வாங்க வேண்டும். இந்தியர்களின் வியர்வைக்கு மதிப்பளிக்க வேண்டும். ஓக்கல் பார் லோக்கல் என்ற மந்திரத்தை கடைபிடிக்க வேண்டும். இனி நாம் புதிதாக வாங்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நாம் உறுதி மொழி ஏற்க வேண்டும். வியாபாரிகளும் உள்நாட்டு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அதை விற்பனை செய்வதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். சுதேசி கொள்கையை கடைபிடிப்பதே நாட்டிற்கு செய்யும் உண்மையான சேவை என்றும் மோடி பேசினார்.