மகாராஷ்டிராவில் குளறுபடிக்கு இடையே நடந்து முடிந்த அரசுப்பணி தேர்வு! MPSC EXAM | PUNE | QUESTION
மகாராஷ்டிரா அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் B வேலைகளுக்கான முதல் கட்ட தேர்வை இன்று நடத்துவதாக அறிவித்து இருந்தது. தேர்வுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள் லீக் ஆனதாக செய்திகள் பரவின. அது குறித்த ஒரு ஆடியோ பதிவு வைரலாகி, தேர்வு எழுத இருந்தவர்களை குழப்பம் அடையச் செய்தது. கேள்வித்தாள்கள் லீக் ஆகவில்லை என மகாராஷ்டிரா அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் சுவர்னா காரத் SUVARNA KHARAT உறுதிபட தெரிவித்து தேர்வு கண்டிப்பாக நடக்கும் என அறிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் புனே நகர குற்றப் பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி 3 இளைஞர்களை கைது செய்தனர். நாசிக்கை சேர்ந்த தீபக் காயராம், சுமித் கைலாஷ், நாக்பூரைச் சேர்ந்த யோகேஷ் சுரேந்திரா ஆகிய மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தீபக் காயராம் மற்றும் சுமித் கைலாஷ் தேர்வு எழுத இருந்த 24 பேர்களின் தொலைபேசி எண்களை எப்படியோ பெற்றுள்ளனர். அவர்களில் 2 பேருக்கு போன் செய்து குரூப் பி தேர்வுக்கான கேள்வித் தாள் மற்றும் பதில்கள் எங்களிடம் உள்ளன. 40 லட்ச ரூபாய் தந்தால் கேள்வித்தாளை தருவதாக கூறி உள்ளனர். பிடிபட்டவர்களிடம் இருப்பது உண்மையான வினாத்தாள் தானா?, அதை யாருக்காவது விற்றார்களா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு 24 பேரின் போன் எண்கள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இந்த களேபரங்களுக்கு இடையே திட்டமிட்டபடி குரூப் பி தேர்வு நடந்து முடிந்தது.