நேபாளத்தில் தீக்கிரையான கட்டடங்கள்: வன்முறையாளர்கள் வெறியாட்டம் | Nepal | Ex PM Wife attacked
பற்றி எரியும் நேபாளம் கலவரக்காரர்கள் அட்டூழியம் மாஜி பிரதமர் மனைவியை தீயிட்டு கொளுத்திய கொடூரம் அண்டை நாடான நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளும் கம்யூனிஸ்ட் அரசு ஊழல் செய்வதாகவும் கூறி, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவம் களம் இறங்கியது. இரு தரப்பு மோதல் முற்றியதில் பெரும் கலவரம் வெடித்தது. ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கலவரக்காரர்களின் வெறியாட்டம் உச்சத்தைஅடைந்தது. பார்லிமென்ட் வளாகம் அருகே தீயிட்டு கொளுத்தப்பட்டது. பிரதமர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. அந்த வகையில் காத்மாண்டுவில் உள்ள முன்னாள் பிரதமர் ஜெலனாத் கனால் வீடும் தீக்கிரையானது. அப்போது, அவரது மனைவி ராஜ்யலக்ஷ்மி மீதும் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அவர் மீது சிலர் தீ வைத்து எரித்தனர். பற்றி எரிந்த வீட்டில் எரிந்து தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட ராஜ்யலக்ஷ்மி ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அரசு கட்டடங்கள், தனியார் நிறுவன கட்டடங்கள், செய்தி, ஊடக நிறுவனங்களும் தீக்கிரையாகின. பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து, நேபாளம் முழுதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் மழை, வெள்ள சேதத்தை பார்வையிட்டு டில்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடான நேபாள கலவரம் குறித்த செய்தி கவலை அளிப்பதாகவும், நேபாள சகோதர, சகோதரிகள் அங்கு அமைதி திரும்ப வழி வகுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.