உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாநாடும், கூட்டணி அறிவிப்பும் ஒரே மேடையில் நடத்த திட்டம் | O.Panneerselvam | Ex CM | MK Stalin

மாநாடும், கூட்டணி அறிவிப்பும் ஒரே மேடையில் நடத்த திட்டம் | O.Panneerselvam | Ex CM | MK Stalin

2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், முதல் ஆளாக அதிமுக - பாஜ இணைந்து கூட்டணியை அறிவித்தன. உடைந்திருந்த கூட்டணி மீண்டும் ஏற்பட்ட பின், தனக்கு முக்கியத்துவம் தரப்படாதது, பிரதமர் மோடியை வரவேற்க அனுமதிக்காதது போன்ற காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. அதன்படியே அவரும் பாஜ தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இந்த முடிவுக்கு பின் முதல்வர் ஸ்டாலினை, ஒரே நாளில் 2 முறை சந்தித்து பேசினார்; தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். இதுகுறித்து கேட்டபோது, அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை; நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என பன்னீர்செல்வம் கூறினார். முன்னதாக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில், மதுரையில் செப்டம்பர் 4ல் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அது, அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாநாடாக அமையும் என்றும் கூறி இருந்தார். இப்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின், செப்டம்பர் மாதத்தில் மாநாடு நடத்த பன்னீர்செல்வம் விரும்பவில்லை என கூறப்படுகிறது. திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பரில் தான் நடக்க உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளன்று மாநாடு நடத்தி, தேர்தல் கூட்டணி முடிவை அறிவிக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத், அதிமுகவை தீய சக்திகளிடம் இருந்து மீட்கும் பாத யாத்திரையை துவக்க திட்டமிட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நடக்கும் பாத யாத்திரையில் அவருடன் 500 பேர் பங்கேற்கின்றனர். பாத யாத்திரை ஒரு வருவாய் மாவட்டத்தை கடக்கும்போது, அதன் எல்லையில் பொதுக்கூட்டம் நடத்தவும், அதில் பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஆலோசித்துள்ளனர். அதிமுகவுக்கு எதிராக களம் இறங்கவும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விசுவாசிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வகையிலும், இந்த பாத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ