பயங்கரவாதிகளை ஆதரிப்பதை பாக் கைவிட்டால் நல்லது: சசி தரூர் Operation Sindhoor| Shashi Tharoor
அனுதாபம் காட்டிய கொலம்பியா அதிர்ச்சியில் உறைந்த எம்பிக்கள் குழு சசி தரூர் பரபரப்பு பேட்டி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றியும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டையும் விளக்குவதற்காக இந்திய எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் சசி தரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு, தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்று, அங்குள்ள அரசு பிரதிநிதிகளை சந்தித்து பேசியது. பயங்கரவாதத்திற்கு எதிரான நம் நாட்டின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். அப்போது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மரணத்திற்கு கொலம்பியா பிரதிநிதிகள் அனுதாபம் தெரிவித்தனர். அதைக் கேட்டு எம்பிக்கள் குழு அதிர்ச்சியடைந்தது. இது குறித்து சசி தரூர் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பகிர்வு குறித்த ஒப்பந்தம் 1960ல் அமலுக்கு வந்தது. நல்லெண்ண அடிப்படையில் இரு நாடுகளும் நதி நீரை பகிர்ந்து வந்தன. ஆனால் பாகிஸ்தான் எங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவி விடுகிறது. பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது. அப்படியிருந்தும் நாங்கள் நல்லெண்ண அடிப்படையிலான செயலை முறித்துக்கொள்ளாமல் இருந்தாேம். ஆனால் அதை இனியும் பொறுக்க முடியாது. பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதிநீர் பகிர்வு நிறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை கைவிட்டு, அதற்கான உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கும் வரை சிந்து நதி விவகாரம் குறித்து மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதுடன், அவர்களை தியாகிகள் போல சித்தரிக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து, அவர்களுக்கு பணம் வழங்கி, அனைத்து வசதிகளையும் செய்து தருகின்றனர். இப்படியிருக்கையில், பஹல்காம் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பதில், பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் பலிக்கு அனுதாபம் தெரிவித்த கொலம்பியாவின் செயலில் எங்களுக்கு வருத்தமே. பஹல்காமில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இறந்தவர்கள் பயங்கரவாதிகள். அவர்கள் பொதுமக்கள் அல்ல. அதற்கான அனைத்து ஆதாரங்களையும் நாங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம் என சசி தரூர் கூறினார்.