அமெரிக்காவில் முக்கிய நபர்களுடன் பிரதமர் சந்திப்பு | PM meets Elon Musk | PM Modi in US | Trump
டிரம்ப் முதல் எலான் மஸ்க் வரை மோடி சந்திப்பின் பின்னணி! எடுக்க போகும் முக்கிய முடிவுகள் பிரான்ஸ் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைந்தார். டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முதல் பயணம் இது. டிரம்பின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக மோடி சென்றுள்ளார். தரையிறங்கியதும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் உரையாடிவிட்டு வாஷிங்டன் விருந்தினர் மாளிகையில் அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டை மோடி சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதம், பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பின் பிரதமர் மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் சந்தித்தார். இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் இருந்தனர். பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் இந்திய -அமெரிக்கா உறவுகளின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர். இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமியும் மோடியை சந்தித்தார். தொடர்ந்து இந்திய நேரப்படி இரவு 10.15 மணியளவில் டெஸ்லா சிஇஓவும் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் தன் குடும்பத்துடன் மோடியை சந்தித்தார். டிரம்ப் அரசில் டி.ஓ.ஜி.இ. எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு துறையின் தலைவர் என்ற முறையில் எலான் மஸ்க் மோடியை சந்திக்கிறார். எலான் மஸ்க், மோடி சந்திப்பது இது முதல்முறை அல்ல. 2015ல் அமெரிக்கா சென்றிருந்த மோடி, சான் ஜோஸ் நகரில் எலான் மஸ்க்கை சந்தித்தார். அப்போது மோடியை தனிப்பட்ட முறையில் எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை சுற்றி காண்பித்தார். தொடர்ந்து இந்திய நேரப்படி இரவு 2.35 மணியளவில் டிரம்ப்பை சந்தித்து மோடி பேசுகிறார். இந்த சந்திப்பின் போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. சில முக்கிய முடிவுகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.