உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பு: நேரமில்லை என சொன்ன பிரதமர் மோடி PM narendra Modi Phone call pre

அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பு: நேரமில்லை என சொன்ன பிரதமர் மோடி PM narendra Modi Phone call pre

பிரதமர் மோடி சைப்ரஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, கனடா சென்றார். கனனாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டின் இடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், இஸ்ரேல்- ஈரான் போர் தீவிரமானதால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஈரான் - இஸ்ரேல் போர் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்புக்குழுவுடன் அவசர ஆலோசனை நடத்துவதற்காக, அதிபர் டிரம்ப் மாநாட்டின் பாதியிலேயே வெளியேறி, வாஷிங்டனுக்கு புறபட்டு சென்றதால், மோடியுடனான சந்திப்பு நடக்க வழியில்லாமல் போனது. அதிபர் டிரம்ப் போன பிறகு, ஜி 7 மாநாட்டின் 2வது நாள் நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். கனனாஸ்கிஸ் நகரில் இருந்தபடி, அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேசினார். இந்த உரையாடல் 34 நிமிடங்களுக்கு நீடித்தது. இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த சண்டை குறித்து அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி விளக்கிக் கூறினார். ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குததைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம்தான் தாக்குதலை நடத்தியது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தோம்; பாகிஸ்தான் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என மோடி கூறினார். ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்தியாவைச் சேர்ந்த 7 அனைத்து கட்சிக்குழுக்கள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று விளக்கியது பற்றியும் டிரம்பிடம் மோடி எடுத்துரைத்தார். இதன்மூலம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்ற மெசேஜ் உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது என்றார், மோடி. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை ராணுவ அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போரை நிறுத்த இந்தியா முடிவு செய்தது; அமெரிக்கா அறிவுறுத்தலின்பேரில் எந்த நிலையிலும் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த பேச்சு வார்த்தை நடத்தவே இல்லை எனவும் டிரம்பிடம் மோடி கூறினார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாட்டின் சமரச முயற்சியை நாங்கள் என்றுமே அனுமதித்தது இல்லை. இனியும் அனுமதிக்க மாட்டோம் எனவும் டிரம்பிடம் மோடி திட்டவட்டமாக கூறினார். இந்தியா -பாகிஸ்தான் இடையிலான போரை தான் தான் பேச்சு வார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்ததாக, அதிபர் டிரம்ப் பலமுறை கூறினார். அதை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்திருந்தார். இப்போது, பிரதமர் மோடி 3-வது நாட்டின் சமரசத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது; பாகிஸ்தான் கெஞ்சியதாலேயே போரை நிறுத்தினோம்; என டிரம்ப்பிடமே கூறியிருப்பது இந்த விவகாரத்தில் இந்தியாவின் துணிச்சலான நிலைப்பாட்டை காட்டுவதாக உள்ளது. பாகிஸ்தான் இனிமேலும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் அதே வழியில் இந்தியா பதிலடி கொடுக்கும்; பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல் நடத்தினால், இந்தியா போர் மூலம் பதிலடி கொடுக்கும்; ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை எனவும் டிரம்பிடம் மோடி கூறினார். ஆபரேஷன் சிந்தூர் ஜம்மு காஷ்மீர் பிரச்னை பற்றி பிரதமர் மோடி சொன்ன விஷயங்களை அதிபர் டிரம்ப் பொறுமையுடன் கேட்டார். பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் இந்தியாவின் முயற்சிகளை டிரம்ப் பாராட்டினார். ஜி 7 மாநாடு முடிந்ததும் நேரம் இருந்தால் வாஷிங்டன் வாருங்களேன்; நாம் இருவரும் நேரில் நிறைய பேசலாம் என மோடியை டிரம்ப் அழைத்தார். அதற்கு மோடி, நேரம் இருக்காது என்றார். முன்கூட்டியே ஒப்புக்கொள்ளப்பட்ட பல நிகழ்வுகள் இருப்பதால், வாஷிங்டன் வர இயலாத நிலையில் இருப்பதாக சொன்ன மோடி, இந்தியாவில் நடக்கும் குவாட் QUAD மாநாட்டுக்கு நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என டிரம்ப்பை அழைத்தார். அதை டிரம்பும் ஏற்றுக் கொண்டார். பைட் விக்ரம் மிஸ்ரி இந்திய வெளியுறவு செயலாளர் ஜம்மு காஷ்மீர், பயங்கரவாத ஒழிப்பு விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பிடம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக மோடி பேசியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பாகிஸ்தான் ராணுவ தளபதி சையத் அசிம் முனீர் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அதிபர் டிரம்பை இந்திய நேரப்படி இன்றிரவு 10.30 மணிக்கு சந்திக்கிறார். டிரம்ப் அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் பாக் தளபதி சையத் அசிம் முனீர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். இப்படிப்பட்ட சூழலில்தான், பயங்கரவாதம் மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை டிரம்பிடம் மோடி உறுதிபட எடுத்துச் சொல்லியிருக்கிறார். இதன்மூலம், இந்த விஷயத்தில் அமெரிக்காவின் உதவி தேவையே இல்லை; நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்பதை டிரம்பிடம் மறைமுகமாக மோடி கூறியிருப்பதாகவே சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ