3 பாமக எம்எல்ஏக்கள் நீக்கம்: ராமதாஸ் அதிரடி: அன்புமணி அதிர்ச்சி pmk Rift Ramadoss Anbumnai 3 mlas s
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் 6 மாதங்களாக மோதல் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாகவும், அவரை செயல் தலைவர் ஆக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்தார். பாமக தலைவர் பதவியை நானே வைத்துக்கொள்கிறேன் எனவும் அப்போது, ராமதாஸ் அறிவித்தார். 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக, 23 தொகுதிகளில் நின்று, 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இவர்களில் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் ராமதாஸ் பக்கம் நிற்கின்றனர். மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம், தர்மபுரி எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளனர். கட்சியில் இருந்து அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் தொடர்ந்து நீக்கி வருகிறார். பதிலுக்கு அன்புமணியும் ராமதாஸ் பக்கம் இருப்பவர்களை நீக்கி வருகிறார். அந்த வகையில், ராமதாசுக்கு ஆதரவாக இருக்கும் சேலம் எம்எல்ஏ அருளை கட்சியைவிட்டு நீக்குவதாக, அன்புமணி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பாமக சட்டசபை கொறடா பதவியில் இருந்து அருளை நீக்க வேண்டும் என, அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூவரும் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இது, ராமதாசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அன்புமணிக்கு ஆதரவாக கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி, மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம், தர்மபுரி வெங்கடேஸ்வரன் ஆகிய 3 எம்எல்ஏக்களையும் இன்று ராமதாஸ் நீக்கியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவாளரான பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல்களை சட்டசபை கட்சித் தலைவர் ஜி.கே.மணி கட்சி தலைமைக்கு கொண்டு வந்தார். இது தொடர்பாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிசீலித்தது. 3 எம்எல்ஏக்கள் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் சபாநாயகரை சந்தித்து இரா.அருளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக பொய்யான தகவலை சொன்னது ஒழுங்கீனமான செயல் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனவே, நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். ஒழுங்கு நடவடிக்கைகுழு முன் விசாரனைக்கு அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரணை முடியும் வரை எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என அன்பழகன் கூறியுள்ளார். பாமக சமூக நீதி பேரவை தலைவராக வழக்கறிஞர் பாலு பதவி வகித்தார். அவரை கடந்த மாதமே அப்பொறுப்பில் இருந்து நீக்கிய ராமதாஸ், அவருக்கு பதிலாக, கோபுவை நியமித்தார். இப்போது, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் பாலு நீக்கப்பட்டுள்ளார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் அன்புமணி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பாமகவினர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்ததில் 3 எம்எல்ஏக்களும் முக்கிய பங்கு வகித்த நிலையில், அவர்களை ராமதாஸ் அதிரடியாக கட்சியை விட்டு நீக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.