மூத்த தலைவர்களுக்கு ஓய்வு: ராகுல் முடிவால் காங்கிரசில் சலசலப்பு Rahul Speech at Bhopal| Langda Ghod
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முனைப்புடன் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் களம் இறங்கியுள்ளார். அதற்காக நாடு முழுவதும் பயணித்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து, இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். கட்சியில் நீண்ட காலமாக முக்கிய பொறுப்பு வகிக்கும் மூத்த தலைவர்களால், கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக, இளம் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் போபாலில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டின் அரசியல் சாசனத்தை காங்கிரஸ் மதிக்கிறது. ஆனால் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியல் சாசனத்தை மதிப்பதில்லை. அவர்கள் அதானி, அம்பானிகளுக்காக ஆட்சி செய்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் இருந்து ஒரு போன் கால் வந்ததும், மோடி உடனே சரண்டர் ஆகிவிட்டார். 1971ல் இதே போன்ற போரின்போது அப்போதைய பிரதமர் இந்திரா, யாருக்கும் அடிபணிய மாட்டேன் என்றார். நாட்டின் தலையெழுத்தை மாற்ற காங்கிரஸ் இளம் தலைவர்கள் முன் வர வேண்டும். பாஜவின் ஆட்சியை துாக்கி எறிந்து, காங்கிரசை ஆட்சிக் கட்டிலுக்கு கொண்டு வரக்கூடிய வலிமை இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கும் பலருக்கு உள்ளது. ஆனால், அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இனி அந்த நிலை இருக்காது. காங்கிரசில் 3 வகை குதிரைகள் உள்ளன. விழாக்களில் பங்கேற்கும் அலங்கார குதிரை, ரேஸில் ஓடும் பந்தய குதிரை, எதற்கும் ஆகாத நொண்டி குதிரை. அந்தந்த குதிரைகளை அந்தந்த இடத்தில் சரியாக பயன்படுத்த வேண்டும். ரேஸ் குதிரைகளைத் தான் களத்தில் இறக்க வேண்டும். அலங்கார குதிரைகளை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்கு பயன்படுத்த வேண்டும். மூன்றாவதாக உள்ள குதிரை தான் மிகவும் மோசமானது. அதனால் ஓட முடியாது. ஆனால், ஏதேனும் ஒரு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு தேவையான புல்லும், தண்ணீரும் கொடுத்து ஓய்வெடுக்க வைப்பது தான் நல்லது. இனி நொண்டி குதிரைகளுக்கு காங்கிரசில் இடமில்லை. இங்கு இருக்கும் இளைஞர்கள் பலர் கட்சியை வளர்த்தெடுக்கும் திறமை கொண்டவர்கள். ஆனால், உங்களின் குரல் கட்சித் தலைமைக்கு கேட்க முடியாத படி உள்ளது. இனி அந்த நிலை மாறும் என ராகுல் கூறினார். ராகுல் மேடையில் பேசியபோது, காங்கிரசார் பலத்த கரவொலி எழுப்பி கூச்சலிட்டு ஆர்ப்பரித்தனர். அவரது பேச்சை ஆமோதித்தனர். காங்கிரசில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் பலரும் பல கோஷ்டிகளாக செயல்படுவதாகவும், அவர்கள் அடுத்தகட்ட தலைவர்களை வளர விட மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராகுலின் இந்த பேச்சு கட்சியிலுள்ள மூத்த தலைவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.