காலியாக உள்ள 12 இடங்களுக்கு செப்டம்பர் 3ல் தேர்தல் | Rajya Sabha | Rajya Sabha Elections | BJP
ராஜ்யசபாவில் பலத்தை கூட்ட போவது யார்? 2 இடங்கள் பெரும் சவால்! சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் வென்றதை தொடர்ந்து, 10 ராஜ்யசபா எம்பிக்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். இதை தவிர, ஒடிசா மற்றும் தெலங்கானாவில் தலா ஒரு ராஜ்யசபா எம்பிக்கள் கட்சி மாறியதால் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். ஒன்பது மாநிலங்களில் காலியாக உள்ள இந்த 12 இடங்களுக்கும் செப்டம்பர் 3ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் உள்ள 245 இடங்களில் பாஜவுக்கு 86 இடங்களும், தேஜ கூட்டணிக்கு 101 எம்பிக்களும் உள்ளனர். பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. பார்லிமென்டில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதற்கு ராஜ்யசபா இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் பாஜ கூட்டணி உள்ளது. தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியில் இருந்த கே.கேசவ ராவ், காங்கிரசில் இணைந்தார். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளதால் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தில் இருந்த மம்தா மொஹந்தா, பாஜவில் இணைந்தார். இப்போது அங்கு பாஜ ஆளுங்கட்சியாக உள்ளதால் வெற்றி பெறுவதில் சிக்கல் இல்லை. அசாம், பீஹாரில் தலா 2 இடங்கள், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுராவில் தலா ஒரு இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சியாக உள்ளதால், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி வெற்றி பெறுவதில் சிரமம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.