அமலாக்கதுறை வாய் திறந்தால் சோலி முடிந்தது | TASMAC | TASMAC Scam | ED Raid
நேரடி லிங்க் கோடி கோடியாய் கைமாறிய பணம் அம்பலமான டாஸ்மாக் மெகா ஊழல் தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உள்ளது. டாஸ்மாக் நிறுவனமானது இந்த துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மது ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து மாநிலம் முழுதும் உள்ள 4,830 சில்லரை மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்கிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு மேலாக மது பானங்கள் விற்பனையாகின்றன. டாஸ்மாக் சார்பில், ஏழு ஆலைகளில் இருந்து பீர், 11 ஆலைகளில் இருந்து மற்ற மதுபானங்கள் கொள்முதலாகின்றன. இந்த மது ஆலைகளை எல்லாம், திமுக முக்கிய புள்ளிகளும், அவர்களுக்கு வேண்டியவர்களுமே நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில், பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடப்பதாகவும் மத்திய அரசின் அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. மார்ச் 7 முதல் 8 வரை மூன்று நாட்களாக, டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்களில் சோதனை நடந்தது. மேலும் டாஸ்மாக் தலைமை அலுவலகம், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என, 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையின் போது, சென்னை பாண்டிபஜார், திலக் தெருவில் உள்ள திமுக பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானதாக கூறப்படும் அக்கார்டு டிஸ்லரிஸ் அண்டு பிரிவரீஸ் மது ஆலை அலுவலகத்தில், கட்டுக்கட்டாக ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதேபோல, திமுக மேலிடத்திற்கு மிகவும் வேண்டியவர் என்று கூறப்படுபவர், எஸ்.என்.ஜெயமுருகன். இவரின் SNJ மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்படுகிறது. அங்கிருந்தும், போலி ரசீதுகள், கலால் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து திமுக முக்கிய புள்ளியின் நெருங்கிய நண்பர் நடத்தும் கால்ஸ் மது நிறுவனத்தின் சென்னை தலைமை அலுவலகம், தி.நகரில் சோதனை நடந்தது. அப்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், கலால் வரி ஏய்ப்பு தொடர்பாக, கட்டுக்கட்டாக ஆவணங்களை எடுத்துள்ளனர். MGM என்ற மதுபான ஆலை மற்றும் அதன் தலைமை அலுவலகத்திலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. திமுகவின் முக்கிய புள்ளிகள் மற்றும் அவர்களுக்கு வேண்டிய நபர்கள் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து தான், டாஸ்மாக் நிறுவனம், 75 சதவீத மதுபானங்களை கொள்முதல் செய்துள்ளது. இதில், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியானது. மதுபான கொள்முதலில் மட்டுமின்றி, சட்டவிரோதமாக பார்களிலும், மது விற்பனை செய்து மோசடி நடந்துள்ளது. சில்லரை கடைகளுக்கு, தனியார் மது ஆலைகள் சார்பில், கியூ ஆர் கோடு வைத்து வசூல் வேட்டை நடந்துள்ளது. சோதனையின் போது கணக்கில் வராத, 50 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், 2016 - 2021 வரை பதிவு செய்த, 35க்கும் மேற்பட்ட வழக்குகளையும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதில், தொடர்புடைய எல்லோரிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டல்களில், மது பார்கள் நடத்த உரிமம் வழங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. அதுபற்றியும் விசாரணை நடக்கிறது. மது ஆலைகளில் இருந்து, எவ்வித ரசீதும் இல்லாமல், நேரடியாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகளுக்கு, மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்கள், அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி உள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்யும் போது, முழு விபரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.