10 சீட்டுக்கு மேல இல்லியா? விசிகன்னா அவ்ளோ எளக்காரமா? thirumavalavan vck 2026 assembly elections
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மதிமுக, விசிக ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா 6 இடங்களை திமுக வழங்கியது. காங்கிரசுக்கு 25 இடங்கள் கிடைத்தது. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் அதிக சீட் வாங்கியே தீர வேண்டும் என மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக வெளிப்படையாக பேசி வருகின்றன. காங்கிரஸ் தலைவர்களும் கூடுதல் சீட், அமைச்சரவையில் இடம் என பேசத் துவங்கி விட்டனர். மொத்தத்தில், வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. அதில் முக்கியமானது. அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஆட்சியை தக்க வைப்பது, பாஜவை காலூன்ற விடாமல் செய்வது ஆகிய விஷயங்கள் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் கூட்டணி கட்சிகள் வெளியேறி விடாமல் பார்த்துக் கொள்வது. காரணம், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பாஜ, அதிமுக, தவெக தூது விட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மீண்டுமொருமுறை கூடுதல் சீட் கோரிக்கையை திருமாவளவன் முன்வைத்திருக்கிறார். சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் வரும் காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக விளங்கும் என்றார். 10 சீட்டுக்கு மேல் தர முடியாது என சொல்லி டீ, பன் கொடுத்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை ஏமாற்றி விட முடியாது எனவும் திருமாவளவன் கூறினார், சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயுடன் ஒரே மேடையில் திருமாவளவனும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக கொடுத்த நெருக்கடியால் அவர் விழாவை புறக்கணித்தார். அப்போதிலிருந்தே திமுக கூட்டணியில் விசிக நீடிக்குமா? விஜய் பக்கம் தாவுவாரா? என்ற விவாதம் நடந்து வருகிறது. திருமாவளவனின் டீ, பன் பேச்சு அடுத்த ரவுண்டு விவாதத்தை கிளப்பி விட்டிருக்கிறது.