மாநாட்டில் விஜய் கூறிய கதையின் ஹீரோ!
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடந்தது. நடிகர் விஜய் உரையாற்றும்போது, தமது அரசியல் பிரவேசத்தை பிரதிபலிக்கும் வகையில் பாண்டிய வம்சத்தில் வந்த குட்டி இளவரசன் பற்றிய கதையை சொன்னார். விஜய் கூறிய கதையில் சொன்ன அந்த சின்ன பையன், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். சங்க காலத்தில் புகழ்மிக்க பாண்டிய மன்னனாக திகழ்ந்தவர். தந்தை இறந்த பின் சிறு வயதிலேயே ஆட்சி பொறுப்பை ஏற்றார். பாண்டியநாடு சிறுவன் கையில் இருப்பதை அறிந்த சேர, சோழ மற்றும் சில சிற்றரசர்கள் சேர்ந்து படையெடுத்தனர். அவர்களை எதிர்த்து போரிட விரும்பிய இளவரசன், தன் படைகளோடு சென்றான். தலையாலங்கானம் என்ற இடத்தில் போர் நடந்தது. பாண்டிய இளவரசன் சிறுவன் தானே, எளிதில் வென்றுவிடலாம் என்று எதிரி நாட்டினர் நினைத்தனர். ஆனால், போர்க்களத்தில் வாள் வீசிய சிறுவனின் அசாத்திய திறமை, வலிமை வாய்ந்த பாண்டிய நாட்டு படைக்கு மேலும் ஊக்கத்தை தந்தது. அந்த போரில் வெற்றி வாகை சூடினான் அந்த சிறுவன். போருக்கு செல்லும் போது அந்த சிறுவன் ஐம்படை தாலியை காலில் அணிந்திருந்ததை வைத்து சிறு வயதிலேயே போர் செய்தான் என்பதை அறியலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.