ஆதவ் அர்ஜுனா - விஜய் சந்திப்பு! பின்னணி என்ன? | Vijai | Adhav Arjuna | TVK
நடிகர் விஜய்யின் தவெக தொடங்கி ஓராண்டை எட்ட உள்ளது. கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் விஜய் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 2வது கட்டமாக மாவட்ட செயலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் இன்று விஜய்யை அவரது பனையூர் அலுவலகத்தில் விசிகவின் முன்னாள் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அவர் தவெகவில் இணைய இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இது தொடர்பாக விஜய் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தவெகவின் தேர்தல் பணிகளை ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனத்திற்கு வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியே வந்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரிய வரும். முன்னதாக ஆட்சியில் சம பங்கு என விஜய் பேசியதை விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த போது ஆதவ் அர்ஜூனா வரவேற்றார். தொடர்ந்து கட்சித்தலைமையின் எண்ணத்துக்கு மாறாக அவர் பேசிய கருத்துக்கள் சர்சையை கிளப்பியது. திமுக மற்றும் விசிக இடையே மோதல் சூழல் உருவானதை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் அக்கட்சியில் இருந்தும் விலகினார். அப்போதிலிருந்தே அவர் தவெகவில் இணைய இருப்பதாக தகவல் பரவியது. இந்த சூழலில் விஜய் - ஆதவ் அர்ஜுனா சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. விசிகவில் ஏற்கனவே துணை பொதுச்செயலாளராக பணியாற்றிய ஆதவ் அர்ஜுனா, அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகளையும் செய்துள்ளார்.