எஸ்ஐஆர் விவகாரத்தில் தவெக நிலைப்பாடு அறிவிப்பு: திமுக நாடகம் ஆடுவதாக விஜய் குற்றச்சாட்டு
நாடு முழுதும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பீகாரை தொடர்ந்து, அடுத்த கட்டமாக தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நடைமுறைக்கு வந்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர், நிரந்த முகவரி மாற்றம் செய்தோர், இரட்டை பதிவுகளை நீக்கம் செய்யவே இந்த நடைமுறை செயல்படுத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தி உள்ளது. திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் எஸ்ஐஆர் விவகாரத்தில் தவெகவின் நிலைப்பாடு குறித்து அதன் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் பற்றிய அறிவிப்பு வெளியான போதே தவெக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்பட சில குறிப்பிட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. முதல்கட்ட எஸ்ஐஆர் குறித்து தெளிவான விளக்கம் இல்லாத நிலையில், இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவது எந்த வகையில் சரியான நகர்வாக இருக்க முடியும்? தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களின் பெயரை வெறும் 30 நாட்களில் சரிபார்த்துவிட முடியுமா? பீகாரைப் போலவே தமிழகத்திலும் மத சிறுபான்மையினர் ஓட்டுகள் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எஸ்ஐஆர் எனும் குழப்பமான நடைமுறையை கைவிட்டு, ஏற்கனவே இருக்கும் நடைமுறையை தொடர வேண்டும் என தவெக வலியுறுத்துகிறது. புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். இறந்தவர்கள், போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் இறுதி தேதிக்கு பின் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் சேர்க்கக் கூடாது. புதிய வாக்காளர் சேர்ப்புக்கு ஆதார் அட்டையை உரிய ஆவணமாக ஏற்க வேண்டும். இறுதி செய்யப்பட்ட பட்டியலை அரசியல் கட்சி முகவர்களுக்கு வழங்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியலை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். என தவெக சார்பில் 7 ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. நம் மண்ணின், மக்களின் உரிமைகளை காக்க அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்பதில் தவெக உறுதியாக உள்ளது. அதே சமயம், எஸ்ஐஆர் விவகாரத்தில் வெறும் வாங்கி வங்கி அரசியலுக்காக திமுக பயன்படுத்த நினைக்கிறது என்பதையும் நன்கு அறிந்துள்ளோம். எஸ்ஆர்ஐ நடைமுறையை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள அரசின் நடவடிக்கை அங்குள்ள மக்களின் உரிமை மீதான அக்கறையை காட்டுகிறது. எஸ்ஐஆரை எதிர்ப்பதாக கூறி வரும் திமுக, இது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாது ஏன்? இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Vijay| #TVK| #SIR| #DMK| #ADMK| #BJP| #Congress| #TNPolitics| #TNElection| #Kerala| #ECI|