இன்னொரு ஷேக் ஷாஜகான்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு | Woman Beaten Up In Bengal Town 'Street Justice
மேற்கு வங்க மாநிலம் சோப்ரா நகரில் ஒரு இளம்பெண்ணையும், ஒரு இளைஞரையும் ஒரு ஆசாமி கம்பால் நடுரோட்டில் கண்மூடித்தனமாக அடிக்கும் வீடியோ நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. அந்தப் பெண்ணின் முடியை பிடித்தும் கொடூரமாக அடிக்கிறான்: வலிதாங்க முடியாமல் பெண் துடிக்கிறார்: கதறுகிறார்; கிட்டத்தட்ட நூறு பேர் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்த்தனர். ஆனாலும், ஒருவரும் தடுக்க முன்வரவில்லை. காதல் விவகாரமா? எதற்காக அந்த ஆசாமி அப்படி அடித்தான் என தெரியவில்லை. ஆனால், அடித்த ஆசாமி மேற்குவங்கத்தை ஆளும் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த தேஜ்முல் என தெரிய வந்துள்ளது. சோப்ரா நகரில் கட்டப்பஞ்சாயத்துக்கு பேர் போனவன். எந்தப் பிரச்னையானாலும் உடனுக்குடன் நீதி வழங்கி விடுவான். தனக்கு எது சரியென படுகிறதோ அதுதான் தீர்ப்பு. இந்த வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பாஜ நிர்வாகி அமித் மால்வியா வெளியிட்டுள்ளார். இந்த அரக்கனுக்கு எதிராக மம்தா பானர்ஜி கடும் நடவடிக்கை எடுப்பாரா அல்லது சந்தேஷ்காளி கொடூரன் ேஷக் ஷாஜகானை காப்பாற்ற முயன்றதுபோல தேஜ்முல்லையும் காப்பாற்றப் போகிறாரா? என அமித் மால்வியா காட்டமாக கேட்டுள்ளார். மம்தா அரசின் கோர முகத்தை இந்த சம்பவம் மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட வேண்டுமெனவும் மால்வியா வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்துக்காக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முகமது சலீமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் சம்பவங்கள் மேற்குவங்கத்தில் தொடர்கதையாக உள்ளது என முகமது சலீம் கூறினார். இடதுசாரி தொண்டர் கொலை வழக்கில் தேஜ்முல் அக்கியூஸ்டாக சேர்க்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டும் முகமது சலீம், தேஜ்முல்லை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். சோப்ரா போலீசார் வழக்கு பதிவு செய்து தேஜ்முல்லை தேடுகின்றனர். மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சர்ச்சை வீடியோ பற்றி திரிணமுல் அரசு எந்த விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை.