தாய் தந்தையுடன் 3 குழந்தைகளும் கருகிய சோகம் | Air india flight crash | Ahmedabad | Family death
குஜராத்தின் ஆமதாபாத்தில் ஏர் இண்டியா பயணிகள் விமானம் நேற்று விபத்துக்குள்ளான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி போட்டுள்ளது. ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் டேக் ஆப் ஆன அடுத் சில நிமிடங்களில், மெடிக்கல் காலேஜ் கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. 169 இந்தியர்கள், 61 வெளிநாட்டுப் பயணிகள், 2 பைலட்டுகள், விமான ஊழியர்கள் 10 பேர் என விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரை தவிர 241 பேரும் இறந்தனர். விமானம் வெடித்து சிதறியதில் இறந்தவர்களின் உடல்கள் கருகியும், சிலரது உடல்கள் பல பாகங்களாகவும் சிதறியதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடக்கிறது. பல கனவுகளுடன் பயணத்தை தொடங்கிய இவர்களுக்கு அதுவே இறுதி நிமிடமாக அமைந்தது அவர்களின் குடும்பத்தினரை மீளா துயரில் ஆழ்த்தி உள்ளது. பெற்றோர் வந்துவிடுவர், உறவினர் வந்துவிடுவர் என காத்திருந்த குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். விமானத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக லண்டன் செல்ல நினைத்த நிலையில், ஒரு நொடியில் வாழ்க்கையே முடிந்துவிட்டது. அதில், ஆசை ஆசையாய் புறப்பட்ட ஒரு குடும்பத்தை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியை சேர்ந்தவர் பிரதிக் ஜோஷி. மனைவி, குழந்தைகளை பிரிந்து 6 ஆண்டுகளாக லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். புதிய வாழ்க்கையை தொடங்க, குழந்தைகளின் கனவுகள், மனைவியின் ஆசையை நிறைவேற்ற அனைவரையும் லண்டனுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். இதற்காக டாக்டரான ஜோஷியின் மனைவி கோமி வியாஸ் தன் பணியை 2 நாட்களுக்கு முன்புதான் ராஜினாமா செய்திருக்கிறார். பெரும் கனவுடன் ஏர் இந்தியா விமானத்தில் ஏறி அமர்ந்திருக்கிறது குடும்பம். துரதிஷ்டமாக நடந்த இந்த விமான விபத்தில், பிரதிக் ஜோஷி, மனைவி கோமி வியாஸ், டுவின்ஸ் மகன்கள் பிரத்யூத், நகுல், மூத்த மகள் மிராயா என 5 பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர். பிரதிக் ஜோஷி, கோமி வியாஸ் தம்பதி நன்கு படித்த லட்சியவாதிகள், கடின உழைப்பாளிகள். குழந்தைகளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் என அவர்கள் வசித்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். வெடித்து சிதறிய விமானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.