திமுகவினரின் மோதலை படம் பிடித்த தினமலர் நிருபரிடம் அடாவடி | Dinamalar reporter attacked | DMK
கோவை அன்னூர் அருகே கோவில்பாளையத்தில் திமுக வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அடிமட்டம் முதல் மேல்மட்ட நிர்வாகிகள் வரை பங்கேற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி திருச்சி சிவா கலந்து கொண்டார். தொண்டாமுத்தூர் பேரூராட்சி 9வது வார்டு உறுப்பினர் வைரம் செந்தில், மேடையில் பேச மூன்று நான்கு முறை அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடைக்காததால் போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருந்தபோது அவர் மேடையில் ஏறி மைக்கை பிடித்து, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கும் இடையே சமரச டீலிங் வைத்திருப்பதாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த ரவியின் ஆதரவாளர்கள் வைரம் செந்திலை பிடித்து தர தரவென இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். இதை தினமலர் நிருபர் கண்ணன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். அதனை பார்த்த தொண்டாமுத்தூர் ரவியின் ஆதரவாளர்கள் நிருபரின் செல்போனை பிடுங்கி அந்த வீடியோவை அழித்தனர். அவரிடம் இருந்த மற்றொரு செல்போனையும் எடுத்து வலுக்கட்டாயமாக அதில் இருந்த திமுக மீட்டிங் தொடர்பான பதிவுகள் அனைத்தையும் அழிக்க வைத்தனர். நிருபர் என்றால் என்னவேண்டுமானாலும் செய்வீர்களா, இங்கு வந்தால் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும் இல்லை என்றால் வேறு மாதிரி ஆகிவிடும் என மிரட்டி அனுப்பினர்.