டிஎஸ்பியை தாக்கிய கடைசி குற்றவாளிக்கு மாவுக்கட்டு | DSP Gayatri attack case | Last offender arrested
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 2 நாட்களுக்கு முன் டிரைவர் காளிக்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து அங்கு சென்ற டி.எஸ்.பி காயத்ரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றார். அப்போது போராட்டக்காரர்கள் சிலர் டிஎஸ்பி தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் அன்றைய தினமே 7 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ராமநாதபுரம் முத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் தலைமறைவானார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை காட்டுக்குள் மறைந்திருப்பதாக இன்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது அவர்களை பார்த்ததும் முருகேசன் தப்ப முயற்சித்துள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் முருகேசனுக்கு வலது கை முறிந்ததாக கூறப்படுகிறது. அவரை சிகிச்சைக்காக போலீசார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.