உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கூரையில் தீ பிடிக்க காரணம் தெரியாமல் விழி பிதுங்கும் கிராம மக்கள்

கூரையில் தீ பிடிக்க காரணம் தெரியாமல் விழி பிதுங்கும் கிராம மக்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ளது கல்குணம் கிராமம். 2015 பெருவெள்ளத்தின்போது மிகப்பெரிய அளவில் பாதித்ததால் தமிழகமே திரும்பிப் பார்த்த கிராமம்தான் இது. இப்போது அதே கல்குணம் கிராமத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. நள்ளிரவில் திடீர் திடீரென மர்மமான முறையில் கூரை வீடுகள் பற்றி எரிவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில மாதங்களில் 10க்கும் மேற்பட்ட வீடுகள், வைக்கோல் போர்கள் மர்மமான முறையில் நள்ளிரவில் பற்றி எரிந்துள்ளன. இந்த சம்பவங்களால் போலீசார் இரவு நேரங்களில் கல்குணம் கிராமத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருந்தும் நேற்று நள்ளிரவு தெற்கு தெருவில் வசிக்கும் பாக்கியராஜ் என்பவரின் வீடு திடீரென பற்றி எரிய தொடங்கியது. வீடு எரிவதை கண்ட பாக்கியராஜும் அவரது மனைவியும் கூச்சலிட்டபடி தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் தீயை முழுவதுமாக அணைத்தனர். தீ எப்படி பற்றியது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். போலீஸ் பாதுகாப்பு பணியில் இருந்த சமயத்திலேயே மேலும் ஒரு வீடு பற்றி எரிந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !