செய்தி சுருக்கம் | 08 PM | 04-10-2024 | Short News Round Up | Dinamalar
சினிமாவுக்கு விடை கொடுத்து முழு நேர அரசியலில் இறங்க போவதாக நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து உள்ளார். அவர் துவங்கி உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ல் நடக்க உள்ளது. இன்று அதிகாலையில் மாநாட்டிற்கான பந்தல் கால் நடும் நிகழ்வு நடந்தது. விழுப்புரம் விக்கிரவாண்டியில் பிரம்ம முகூர்த்தத்தில் யாகம் வளர்த்து அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் பந்தல் கால் நட்டினர். அரசியலில் முதல்படியாக பார்க்கப்படும் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழாவுக்கு விஜய் வரவில்லை. அவரது வரவேற்பை எதிர்பார்த்து காத்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரம் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் இது தான் அவரது கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இன்று இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இதில் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குனர் எச்.வினோத், நடிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசியல் களத்தில் முதன் முதலாக இறங்கி உள்ள விஜய் ஒவ்வொரு அடியும் மிக கவனமாகவே எடுத்து வைக்க வேண்டும். அவர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அனைவரும் உன்னிப்பாக கவனிப்பார்கள். கதாநாயகனாக நடிக்கும் கடைசி படத்தின் பூஜைக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல் இலக்கு. இனி அரசியல் பாதை தான் என தீர்க்கமாக சொன்ன விஜய், கட்சியின் முதல் பூமி பூஜையில் கூட பங்கேற்காமல், பட பூஜைக்கு சென்றது விவாதத்தை கிளப்பியுள்ளது. ---------- ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் வரும் 10 ம்தேதி திரைக்கு வரவுள்ளது. ரஜினி 171 வது படமான கூலி படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்த போது வயிற்று வலி ஏற்பட்டது. சென்னை வந்த அவர் அப்போலோ ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார். இதயத்தில் இருந்து ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி ரத்த நாளம் வீங்கி இருந்தது. வீக்கத்தை சரிசெய்ய டாக்டர்கள் ஸ்டென்ட் பொருத்தினர். அவர் விரைந்து குணமடைய பிரதமர் மோடி, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.