செய்தி சுருக்கம் | 01 PM | 23-10-2024 | Short News Round Up | Dinamalar
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் நெருங்கிய நண்பர் ஆர்.இளங்கோவன். இவர் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தவர். தற்போது, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு முதல் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை தன்னிடமே வைத்திருந்த பழனிசாமி, 2022ல் இளங்கோவனுக்காக விட்டுக்கொடுத்தார். அந்த அளவு இளங்கோவனை நெருங்கிய நண்பராகவே இபிஎஸ் வைத்துள்ளார். இந்நிலையில் திருச்சி முசிறி அருகே உள்ள இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். கோவையில் உள்ள இளங்கோவனின் உறவினர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டூடியோ சாலையில் உள்ள Bull நிறுவனத்தின் உரிமையாளர் பொன்னுதுரை என்பவரது வீட்டிலும், உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் உள்ள லட்சுமி டூல்ஸ் வரதராசன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவானந்தா காலனியில் செயல்படும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட்-ல் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை எனவும், தனது கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை நடைபெறுகிறது என்றும் இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார். இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்து, இளங்கோவன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.