செய்தி சுருக்கம் | 01 PM | 21 -04-2025 | Short News Round Up | Dinamalar
நடிகர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், தனது ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தார். இதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். கடன் தொகையை திருப்பி செலுத்தாததால், தனபாக்கியம் நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக ஜெகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க உத்தரவிட்டனர். இருப்பினும் படத்தின் உரிமைகளை துஷ்யந்த் வழங்கவில்லை. இதனால் தனபாக்கியம் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டது. இதுதொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட், நடிகர் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது. வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும் என சிவாஜியின் மற்றொரு மகன் நடிகர் பிரபு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தந்தை சிவாஜி எழுதி வைத்த உயிலின் அடிப்படையில், அன்னை இல்லம் வீட்டை பத்திரப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். துஷ்யந்தின் தந்தை ராம்குமார் அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் என்றும், வில்லங்க பதிவில் கோர்ட் ஜப்தி உத்தரவை நீக்கவும் பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டது.