இன்றைய காலை முக்கியச் செய்திகள் | அதிகாரிகள் வசூல் வேட்டை | 8 AM | 06-09-20
ஜூலை 15ல் முதல்வர் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்தார். அக்டோபர் வரை 10 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஜாதி சான்று, பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா, பென்ஷன், மகளிர் உரிமை தொகை, மருத்துவ காப்பீடு விண்ணப்பம், ஆதார் மற்றும் ரேஷன் கார்டில் திருத்தம் கேட்டு மக்கள் மனு அளித்து வருகின்றனர். பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் கோரியும், அதிக அளவில் மனுக்கள் வருகின்றன. அவர்களிடம் நிலத்தின் சந்தை மதிப்புக்கு தகுந்தபடி, வருவாய் துறையினர் மறைமுக வசூலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தலையாரி முதல் தாசில்தார் வரை லஞ்சப் பணம் கைமாறுகிறது. ஆயிரத்தில் துவங்கி லட்சங்களில் பெறப்படுகிறது. இதேபோல் சொந்த இடங்களுக்கு மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய இடங்களுக்கும், நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கட்டடங்களுக்கும் மின் இணைப்பு கேட்டு பலர் மனு கொடுத்துள்ளனர். அவர்களிடம் மின் வாரிய ஊழியர்கள் பணம் பெற்று, பணிகளை முடித்து கொடுக்கின்றனர். உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக, வருவாய் மற்றும் மின்வாரியத்தினர் வசூல் வேட்டை நடத்துகின்றனர் என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும், பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு நிலத்தின் மதிப்புக்கேற்ப அலுவலர்கள் லஞ்சம் கேட்கின்றனர். அரசு அலுவலகங்களில் காலியிடங்கள் அதிகம் உள்ள நிலையில், முகாமால் அலுவலக பணிகள் முடங்கி உள்ளன. திட்டத்தில் பயனடைந்தவர்கள் விபரத்தை கிராமங்கள் தோறும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார். உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு, காலையில் 100 பேருக்கு டிபன் வழங்க, 10 ஆயிரம்; 200 பேருக்கு மதிய உணவு வழங்க 20 ஆயிரம்; டீ, காபி, ஸ்நாக்ஸ்க்கு 6,000 ரூபாய் செலவிடப்படுகிறது. பந்தல் அமைக்க 45 ஆயிரம், தண்ணீர் பாட்டில் 6,000, முக்கிய விருந்தினர்களுக்கு சால்வை வாங்க 3,000; செய்தி விளம்பர செலவிற்கு 7,000 செலவிடப் படுகிறது. இதர செலவுகள் உட்பட ஒரு முகாமிற்கு 1.30 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது. ஊரகப்பகுதிகளில் ஊராட்சி செயலர்கள் தங்கள் சொந்த செலவில், முகாமிற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். நகரப்பகுதிகளில் திருமண மண்டபம் வாடகைக்கு 20 ஆயிரம் வரை கூடுதல் செலவு செய்யப்படுகிறது. முகாம் முடிந்து செலவிற்கான பில்களை பாஸ் செய்ய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகர் பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கமிஷன் கேட்பதால் செலவழித்த பணத்தில் பாதியை பெறுவதே சிரமமாக உள்ளது என ஊராட்சி செயலர்கள் புலம்புகின்றனர். #Stalincamp | #DMK | #TNgovt | #UngaludanStalin | #CMStalin