உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / செய்தி சுருக்கம் | 08 PM | 20-07-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 08 PM | 20-07-2025 | Short News Round Up | Dinamalar

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நாளை துவங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்கிறது. இதையொட்டி, டில்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. பாஜ, காங்கிரஸ், திமுக, அதிமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ, ஜேஎம்எம், ஜேடியு உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த எம்பிக்கள் ஆதரவு தேவை என பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார். கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை, இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பேச்சு, விவசாயிகள் போராட்டம், ஹிந்தி திணிப்பு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றனர். இந்த கூட்டத் தொடரில் எம்பிக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். அவர் பார்லிமென்ட்டில் உரையாற்ற வேண்டும் என காங்கிரஸ், என்சிபி பவார் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். எம்பிக்களின் கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில், அனைத்து கட்சி கூட்டம் முடிந்தது. இதுகுறித்து, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. கூட்டத்தில் அனைத்து கட்சி எம்பிக்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 51 கட்சிகளை சேர்ந்த 54 உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் 40 பேர் தங்கள் கட்சி சார்பிலான கருத்துக்களை முன் வைத்தனர். மக்களுக்கு பலன் தரும் விஷயங்கள் குறித்து எம்பிக்கள் விவாதிக்க வேண்டும் அரசியல் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். பார்லிமென்ட் விவகாரத்தில் நாட்டு நலன் கருதி எம்பிக்கள் செயல்பட வேண்டும். பார்லிமென்ட் நேரத்தை வீணடிக்க கூடாது. பார்லிமென்ட்டை சுமுகமாக நடத்துவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்புக்கும் பொறுப்பு உள்ளது. அதிக எம்பிக்கள் உடைய கட்சிகளுக்கே பார்லியில் பேச அதிக நேரம் ஒதுக்கப்படுவதாக சிறிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. எம்பிக்களின் எண்ணிக்கையை பொருத்தே நேரம் ஒதுக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவருவது பற்றி லோக்சபா சபாநாயகர், ராஜ்யசபா தலைவரிடம் வலியுறுத்துவோம். 1 - 2 எம்பிக்கள் உடைய சிறிய கட்சிகளின் எம்பிக்களுக்கும் போதிய நேரம் ஒதுக்க அலுவல் ஆலோசனை குழுவிடம் பரிந்துரைப்போம் எனவும் கிரண் ரிஜிஜு கூறினார். இந்த கூட்டத் தொடரில் மணிப்பூர் மாநிலத்திற்கான ஜிஎஸ்டி மசோதா, ஐஐஎம் சட்ட திருத்த மசோதா, சுரங்கம் மற்றும் கனிம வள மேம்பாடு பற்றிய சட்ட திருத்த மசோதா, போதைப் பொருள் தடுப்பு சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ