இன்றைய இரவு முக்கியச் செய்திகள் | அரியணை ஏற துடிப்பதா? | ராம ரவிக்குமார் கேள்வி! | 8 PM | 22-12-2025
திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என 2021 சட்டசபை தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்தனர். இவற்றை நம்பி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள், திமுகவுக்கு ஆதரவு அளித்தன. ஆனால் திமுக ஆட்சி முடியும் தருவாயிலும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என தொடர் போராட்டத்தை ஆசிரியர் சங்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை கருத்து கேட்பு கூட்டமாக மாற்றியது கண்டிக்கத்தக்கது. கடந்த 4 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது கூறியதையே, இப்போதும் அமைச்சர் வேலு கூறுகிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.