தினமலர் எக்ஸ்பிரஸ் | 18 SEP 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar
சென்னையில் திமுக முப்பெரும் விழா நடந்தது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருணாநிதி உரையாற்றுவது போல திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். முதல்வர் ஸ்டாலினுக்கு அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பது போலவும் திரையில் காட்டப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் தாக்கியதில் ஆட்டோ டிரைவர் பாதகுமார் இறந்துள்ளார். அவருடைய நண்பர் அஜீத்குமார் கண்முன்னே போலீஸ் தாக்கியுள்ளனர். பாதகுமார் இறப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூரில் இலங்கை தமிழர்களுக்கு 12 கோடியில் 236 புதிய வீடு கட்டி தரப்பட்டது. ஆகஸ்ட் 29ல் அமைச்சர்கள் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தனர். பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு இரண்டு வாரங்களே ஆன நிலையில் ஒரு வீட்டின் கூரை இடிந்துள்ளது. மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் நிபா வைரஸ் பாதிப்பால் இறந்தார். இதையடுத்து தமிழகம்-கேரளா எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதார குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருவோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் உள்ளவர்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.