செய்தி சுருக்கம் | 01 PM | 21-09-2024 | Short News Round Up | Dinamalar
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. லட்டு தயாரிப்புக்கு நெய் விநியோகம் செய்த திண்டுக்கலை சேர்ந்த ஏஆர் டெய்ரி புட் நிறுவன நெய்யில் கலப்படம் இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று காலை மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், அந்த நிறுவனத்தில் ஆய்வு செய்தார். 2 மணி நேரத்துக்கு மேலாக இந்த சோதனை நீடித்தது. அங்கு தயாரிக்கப்பட்டு வரும் நெய், பன்னீர், வெண்ணெய், தயிர், மோர், இனிப்பு மற்றும் பால் பொருட்களை ஆய்வுக்காக சேகரித்தார். எங்கள் நிறுவன நெய் பொருட்களில் கலப்படம் ஏதும் இல்லை. வேண்டுமென்றால் பொருட்களை ஆய்வு செய்து கொள்ளலாம் என அந்நிறுவன அதிகாரிகள் நேற்று விளக்கம் அளித்து இருந்தனர். இதற்கிடையே நேற்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் அனிதா அங்கு சென்று சோதனை செய்தார். பின்னர் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை ஆய்வுக்காக எடுத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது.