செய்தி சுருக்கம் | 08 PM | 08-08-2024 | Short News Round Up | Dinamalar
முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாய் மசூதி, முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வக்பு சொத்துகளை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டு லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பார்லிமென்ட் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சட்டமசோதாவை தாக்கல் செய்தார். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா குறித்த மத்திய அரசின் விளக்கங்களை ஏற்க மறுத்தன. இந்த சட்டத்திருத்த மசோதா, முஸ்லிம்களுக்கு எதிரானது எனக்கூறி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், வக்புவாரிய சட்டத்திருத்த மசோதா பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.