செய்தி சுருக்கம் | 01 PM | 08-11-2024 | Short News Round Up | Dinamalar
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்தது. தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார். 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் அப்துல் ரஹீம் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். சட்டசபை நேற்று முன்தினம் கூடிய போது, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ எம்.எல்.ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று சட்டசபையில் என்ஜினீயர் ரஷீத்தின் சகோதர குர்ஷித் அகமது சிறப்பு அந்தஸ்தை ஆதரித்து பதாகையை காண்பித்தார். இதனால் எம்.எல்.ஏக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை சட்டசபை கூடியதும் 3வது நாளாக 370வது சட்டப்பிரிவை மீண்டும் அமல்படுத்த கோரும் தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜ எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவாமி கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் பாஜ எம்.எல்.ஏக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனால் சபாநாயகர் அப்துல் ரஹிம், பாதுகாவலர்களை அழைத்து பாஜ எம்.எல்.ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்டார். எம்.எல்.ஏக்கள் வெளியே மறுப்பு தெரிவித்ததால் குண்டுக்கட்டாக தூக்கி அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.