செய்தி சுருக்கம் | 08 AM | 04-11-2024 | Short News Round Up | Dinamalar
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் தண்டவாளத்தில் 3 இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் போக்குவரத்து நேற்று ரத்து செய்யப்பட்டது. சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் கல்லார் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடியாததால் இன்றும், நாளையும் ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கிடையே, கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார். ----- திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. கந்தசஷ்டி விழாவிற்காக பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பக்தர்களுக்காக, 18 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளையும், அங்குள்ள வசதிகளையும் பார்வையிட்டார். மேலும், புதிதாக திறக்கப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்தார். விடுதி அறைக்குள் சென்று பார்வையிட்ட நீதிபதி புகழேந்தி, அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, கோயிலுக்கு வருவோர் பக்தியுடன் கடவுளை மட்டும் நினைத்து சிந்தனையோடு இருக்க வேண்டும். விடுதி அறையில் வைக்கப்பட்டிருந்த டிவியை அகற்ற வேண்டும். ஏசி, சொகுசு மெத்தைகள் தேவை தானா? என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். ஆய்வின் போது கோவில் தக்கார் அருள் முருகன், இணை கமிஷனர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.