அன்னமிட்டு... அன்பை பகிர்ந்து...
பனி மறையாத அக்காலை வேளையில், கை நிறைய பிஸ்கட், பால், பப்பிக்கான உணவு பொட்டலங்களுடன், சற்று தள்ளாடியபடியே, வடவள்ளி, அஞ்சனுார் ரோட்டில், நடந்து சென்றார், அப்பெண்மணி. அவரின் காலடி சத்தத்தை கேட்ட மறுநொடியில், ஓய்வெடுத்து கொண்டிருந்த மூன்று பப்பிகள் ஓடிவந்தன. சிறிது நேரத்திலே, அப்பகுதியில் இருந்த மொத்த பப்பிகளுக்கும் தேவையானதை தனித்தனியே பிரித்து கொடுக்க தொடங்கினார். அவை சாப்பிட்டதும், காலி பைகளுடன் கிளம்ப ஆயத்தமானவரிடம் பேசினோம்.நம்மிடம் அவர் பகிர்ந்தவை:என் பெயர் ஜெய்ஸ்ரீ விஸ்வநாதன்; 73 வயதாகிறது. சொந்த ஊர், கேரளாவில் உள்ள பாலக்காடு. சின்ன வயதில் இருந்தே, வீட்டில் பூனைகள் இருக்கும். எங்கள் அக்ரஹாரத்தை சுற்றி இருந்த பப்பிகளுக்கு, நான் தான் 'அன்னப்பூரணி'. திருமணத்திற்கு பின், கணவருக்கும் விலங்குகள் மீது பிரியம் இருந்ததால், எப்போதும் தெருவில் வசிக்கும் நாய், பூனைகளுக்கு உணவளிப்பது, பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது வழக்கம்.கணவருக்கு வேலை கிடைத்ததால், 20 ஆண்டுகள், குவைத் நாட்டில் வசித்தோம். அங்கே, செல்லப்பிராணிகளை உடன் வைத்து கொள்ள முடியாத சூழல் இருந்தது. இந்தியா வரும் போதெல்லாம், செல்லப்பிராணிகளுடன் தான், அதிக நேரம் செலவிடுவேன். அச்சமயத்தில் தான், செல்லப்பிராணிகள் இல்லாத வாழ்வு, சுமையானது என்பதே புரிய ஆரம்பித்தது.பின் நிரந்தரமாக சொந்த ஊர் திரும்பியதும், மீண்டும் செல்லப்பிராணிகளுக்கு உணவளிப்பது, பராமரிப்பது என களத்தில் குதித்துவிட்டேன். என் ஒரே மகளும், மும்பையில் குடியேறிவிட்டார். எனது கணவர் மறைவுக்குப்பின், தனிமையில் இருக்கும் எனக்கு துணையாக இருப்பது, செல்லப்பிராணிகள் மட்டும் தான். இவைகளுடன் நேரம் செலவிடும் போது, மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்கிறேன்.என் வீட்டை சுற்றியுள்ள, 30 நாய்களுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து காலை உணவு அளிக்கிறேன். வெளியூருக்கு செல்லும் போது, ஒருவரை நியமித்து, சாப்பாடு வழங்க ஏற்பாடு செய்வது வழக்கம். இதற்கு, மாதம் 7 ஆயிரம் செலவாகிறது. இருப்பினும், நான் வந்து உணவளிப்பேன் என்ற எதிர்பார்ப்பில், 30 ஜீவன்கள் காத்திருக்கும் என்பதால், இத்தொகையோ, இதற்காக செலவிடும் நேரமோ எனக்கு பொருட்டே இல்லை.இந்நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவைகளுக்கு எதாவது, தோல் அலர்ஜி வந்தால், உடல்நிலை சரியில்லாத போது, உடனே மருத்துவமனை அழைத்து செல்வேன். வீட்டில் என்னுடன் மூன்று பப்பிகள் உள்ளன. இவைகளுடன் இருப்பது, மனதுக்கு பிடித்திருக்கிறது. இதன் கண்களின் தெரியும் ஒளியில், ஒவ்வொரு நாளையும் கடக்கிறேன்.