நீங்கள் விலங்கு நல ஆர்வலரா? தடுப்பூசி அவசியம்
சமீபகாலமாக, விலங்கு நல ஆர்வலர்கள், செல்லப்பிராணி வளர்ப்போர், தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள், அவை கடித்து இறந்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் ரேபிஸ். இதுபோன்ற அபாயத்தை தவிர்க்க வேண்டும். நாய், பூனைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் மிக கொடிய வைரஸ்களில் ஒன்று ரேபிஸ். உடனே சிகிச்சை எடுத்து கொண்டால் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்; இல்லாவிடில் இறக்க நேரிடலாம். விலங்குநலன் சார்ந்த பணிகளில் ஈடுபடும் களப்பணியாளர்கள், கட்டாயம் 'ப்ரீ எக்ஸ்போஷர் ரேபிஸ்' (Pre Exposure Rabies Vaccine) தடுப்பூசி, ஆண்டுதோறும் போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்ட நாளில் இருந்து, மூன்று, ஏழு மற்றும் 28வது நாளிலும், தவறாமல் அடுத்தடுத்து செலுத்தி கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக போடப்படுகிறது. தடுப்பூசி போட்டவர்களை நாய் கடித்தால், கட்டாயம் 'போஸ்ட் எக்போஷர் ரேபிஸ்' (PostExposure Rabies Vaccine) தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்தாலும் அலட்சியம் கூடாது. ரேபிஸ் வைரஸ் பரவும் தன்மையை மட்டுமே, முதல் வகை தடுப்பூசி கட்டுப்படுத்தும். அதனால் நாய் கடித்த பிறகும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். உங்கள் நாய்க்கு ஏற்கனவே ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் அவை கடித்தால், உடனே சோப்பு கொண்டு காயம் ஏற்பட்ட பகுதியை கழுவி, 30 நிமிடங்களுக்குள் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம். அலட்சியம் காட்டினால் ஆபத்துதான். - பா.கனிமொழி, கால் நடை உதவி மருத்துவர், துாத்துக்குடி.