இதெல்லாம் வாங்கியாச்சா?
கொறிக்கும் வகை விலங்குகள், பறக்கும் அணில், பாம்பு போன்ற எக்ஸாடிக் செல்லப்பிராணிகளுக்கு, மார்கெட்டில் எக்கச்சக்க வித்தியசமான விளையாட்டு பொருட்கள் கிடைக்கின்றன. இதுபற்றி, சென்னை, எருக்கஞ்சேரியை சேர்ந்த, 'பி.கே., பெட்ஸ் பேரடைஸ்' கடை உரிமையாளர் பாலாஜி, நம்மிடம் பகிர்ந்தவை:எக்ஸாடிக் செல்லப்பிராணிகளை பொறுத்தவரை, ஒவ்வொன்றும் வெவ்வேறு குணாதிசயம் கொண்டிருக்கும். குறிப்பாக, ஹாம்ஸ்டரை பொறுத்தவரை, ஒருநாளைக்கு ஆறு கிலோமீட்டர் துாரம் நடந்தால் தான், அதற்கு செரிமான பிரச்னை ஏற்படாது. வீட்டிற்குள் இதை வைத்து வளர்க்கும் போது, அதற்கேற்ற உடற்பயிற்சி அளிக்கும் வகையில், பல்வேறு விளையாட்டு பொருட்கள் விற்கப்படுகின்றன. இவை, சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்கப்படுகிறது. ஆன்லைன், கடைகளில் நேரடியாக வாங்கி கொள்ளலாம். விசிறியில் விளையாட
மேஜை மீது வைக்கும் மின்விசிறியின் ஒரு பக்கம் மட்டும் இருக்கும் வகையில், இது வடிவமைக்கப்பட்டிருக்கும். பல்வேறு வடிவங்களில் இது கிடைக்கிறது. இதன்மீது ஏறி நடந்தால், விசிறியும் சுற்ற ஆரம்பிக்கும். ஹாம்ஸ்டர், பறக்கும் அணிலை இதில் விட்டால், குஷியாகிவிடும். இது, 350 ரூபாயில் இருந்து கிடைக்கிறது. கூண்டில் பலவகை
பறவை கூண்டு போன்ற அமைப்பில், ஒவ்வொரு செல்லப்பிராணியின் இயல்புக்கு ஏற்ப, சில மாற்றங்கள் செய்து விற்கப்படுகிறது. இதில், ஒளிந்து விளையாட தனி இடம், ஏறி, இறங்க பைப் போன்ற அமைப்பும் உள்ளது. இதற்குள், தண்ணீர் பாட்டில் இணைத்துவிட வேண்டும். இதன் ஆரம்ப விலை ரூ. 1,800. சறுக்கி விளையாட
குழந்தைகளுக்கான சறுக்கு தளம் போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்குள் நுழைந்தால், மறுமுனை செல்லும் போது தானாகவே மேலே எழும்பி கொள்ளும். இதற்குள் விட்டால், இருப்பக்கமும் ஓடி கொண்டே விளையாடும். இதன் விலை, 200 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. தலைகீழாக நடக்க
மூடியுடன் கூடிய உண்டையான பவுலில், ஆங்காங்கே துளைகள் இடப்பட்டுள்ளன. இதற்குள் ஹாம்ஸ்டர், கினியாபிக் போன்றவற்றை விட்டால், அதற்குள் நடக்கும் போது, பவுல் உருள ஆரம்பிக்கும். வீட்டிற்குள் பாதுகாப்பாக இவற்றைவைத்திருக்க, இது பயன்படும். இதை, 300 ரூபாயில் இருந்து வாங்கலாம். தப்பிக்கவே முடியாது
சிலர் ஹாம்ஸ்டர், கினியாபிக், பறக்கும் அணில் ஆகியவற்றை, பார்க், கடைவீதிகளுக்கு அழைத்து செல்ல விரும்புவர். இச்சமயங்களில், புதிய சூழலை பார்த்ததும், அவை ஓடிவிடாமல் இருக்க, அவற்றுக்கு பெல்ட் அணிவித்து அழைத்துச் செல்லலாம். இதன் கயிறு உங்கள் கையில் இருக்கும் வரை, தப்பிக்கவே முடியாது.