உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?

இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?

செல்லப்பிராணியாக நாய் வளர்க்க பலரும் ஆசைப்படுகின்றனர். ஆனால், எந்த வகை நாய் வாங்குவது, ஆரோக்கியமான பப்பியை எப்படி தேர்ந்தெடுப்பது, என்ன தேவைக்காக செல்லப்பிராணி வளர்க்கிறோம் என்ற புரிதல், பலரிடம் குறைவாகவே இருக்கிறது. இதனால், ஆசையாக பப்பி வாங்கி சென்ற ஓரிரு நாட்களிலே அதை பராமரிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். நாய் வளர்ப்போர், வளர்க்க திட்டமிடுவோர், அதன் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கீழ்கண்ட விஷயங்களையும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்கிறார், மருத்துவர் செந்தில்குமார்.

இடவசதி

செல்லப்பிராணிக்காக வீட்டில் ஒதுக்கப்படும் இடத்தின் அளவு எவ்வளவு என்பது முக்கியம். இதேபோல் எந்த நோக்கத்திற்காக, செல்லப்பிராணி வளர்க்க முடிவு செய்துள்ளீர்கள் என தெரிந்தால் தான், அதற்கேற்ற வகை நாய் தேர்ந்தெடுக்க முடியும். வீட்டிற்குள் வளர்க்க முடிவெடுத்தால் சிறிய வகை நாய்களை வாங்கலாம். பாதுகாப்பு, காவல் நோக்கத்திற்கு வளர்ப்பதாக இருந்தால், பெரிய வகை நாய்கள், நாட்டு இன நாய்களை தேர்ந்தெடுக்கலாம். பொதுவாக ஆணை விட பெண் நாய்களுக்கு, காவல் காக்கும் திறன் அதிகம்.

எப்படி தேர்ந்தெடுப்பது

நீங்கள் வாங்கும் பப்பியின் வயது 2- 4 மாதங்கள் வரை இருப்பின், அதை உங்கள் வீட்டின் சூழலுக்கேற்ப பழக்கப்படுத்துவது எளிது. புதிதாக பப்பி வாங்கும் போது அதன் தோலில் ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். காதுகள் சுத்தமாக, துர்நாற்றம் வீசாமல் இருப்பதோடு, கண்கள் பளீச்சென்று இருக்க வேண்டும். பப்பியின் முதுகு பகுதியை அமுக்கிப்பார்த்து, எலும்புகள் வலுவாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். முன்னங்காலுக்கு ஏற்ப, உரிய இடைவெளியில் பின்னங்கள் எடுத்து வைத்து நடக்கிறதா என்பதை கண்காணிப்பதோடு, 'ஒரிஜினல் ப்ரீட்' என்பதற்கான சான்றிதழ் பார்த்து வாங்கலாம்.

ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து

பப்பி வாங்கியதும், கால்நடை மருத்துவரை அணுகி, அதன் வயதை கணக்கிட்டு, ஹெல்த் ரிப்போர்ட் பெறுவது அவசியம். தெருநாய் தத்தெடுத்தாலும், அதன் வயதுக்கேற்ப, தடுப்பூசி போட வேண்டும். முறையாக தடுப்பூசி போடுவது, பப்பிக்கு மட்டுமல்ல, அதை வளர்ப்பவர்களுக்கும் நல்லது.ஏனெனில், ரேபிஸ், மஞ்சள்காமாலை போன்றவை, முறையாக தடுப்பூசி போடாத, செல்லப்பிராணிகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ரேபிஸ் வைரஸ், வீட்டிற்குள்ளே வைத்து வளர்க்கும் பப்பி, பூனைகளிடமிருந்து கூட, மனிதர்களுக்கு பரவுகிறது.இதேபோல், பார்வோ, மூளைக்காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ், பாதிக்கப்பட்ட ஒரு பப்பியிடம் இருந்து, மற்ற பப்பிகளுக்கு பரவும் அபாயம் உள்ளது. இதனால், தடுப்பூசி போடுவதற்கு முன்பு, பப்பியை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது. இதன்மூலம், உங்கள் நாயின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

உரிமையாளர்களின் கவனத்திற்கு

ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பதாக முடிவெடுத்துவிட்டால், அதற்கான சூழலை அமைத்து தருவது உரிமையாளர்களின் பொறுப்பாகும். இதை வலியுறுத்தும் வகையில், நாய்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்ய, உலக நாய்கள் தினம், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதை கொண்டாடுவதற்கு முன்பு, உங்கள் பப்பிக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறீர்களா என்ற கேள்வியை, உங்களிடம் நீங்களே கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.- எஸ்.எஸ். செந்தில்குமார்,மூத்த கால்நடை மருத்துவர், மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி