உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / கோர்ட்டுக்கு போன கக்கா வழக்கு; போராடி வென்ற மூதாட்டி

கோர்ட்டுக்கு போன கக்கா வழக்கு; போராடி வென்ற மூதாட்டி

சென்னை, திருவான்மியூரை சேர்ந்தவர் மனோரமா ஹிடேஷி. இவர், தன் செல்லப்பிராணிக்கு நேர்ந்த கொடுமைக்கு எதிராக, சென்னை 16 வது கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின், கடந்த டிசம்பரில் தீர்ப்பு வெளியானது.இவ்வழக்கின் பின்னணி குறித்து மனோரமா நம்மிடம் பகிர்ந்தது:சென்னை, பாலவாக்கத்தில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், டால்மேஷன் இனத்தை சேர்ந்த பப்பி (டாபி) உடன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வசித்தேன். அங்கே, செல்லப்பிராணி வைத்திருப்போருக்கு, அவ்வப்போது சில புதுப்புது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். லிப்ட் பயன்படுத்தக்கூடாது. பொது இடத்தில், செல்லப்பிராணி சிறுநீர், மலம் கழித்தால், உரிமையாளருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஒருநாள் என் டாபி, வாக்கிங் முடித்து திரும்பிய பிறகு வளாகத்தில் மலம் கழித்துவிட்டது. இதை சி.சி.டி.வி., கேமராவில் பார்த்த செக்யூரிட்டி, அடுத்த 10 நிமிடங்களுக்குள் சுத்தம் செய்யாவிடில், ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். மேலும், அடுத்தடுத்த 10 நிமிடங்களுக்கு, அபராத தொகை அதிகரித்து கொண்டே போகும் என, கறாராக கூறிவிட்டார்.அப்போது எனக்கு 78 வயது. டாபியை இழுத்து கொண்டே, அவசர அவசரமாக, நான்காவது தளத்தில் இருக்கும் என் வீட்டிற்கு சென்ற போது, கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டேன். என் மேல் டாபியும் விழுந்ததால், அதற்கு காலில் அடிப்பட்டுவிட்டது. அந்த நிலையிலும், அப்பகுதியை சுத்தம் செய்து விட்டேன். ஆனால், கீழே விழுந்ததில் இருந்து, டாபி மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதோடு, எழுந்து இயல்பாக நடக்க முடியாமல் சிரமப்பட்டது. சிகிச்சை அளித்தும் பலனில்லை. அடுத்த இரு மாதங்களிலே, டாபி இறந்துவிட்டது.இதை தாங்கி கொள்ள முடியாமல், மிகுந்த அழுத்தத்திற்கு ஆளானேன். என் டாபியின் இறப்புக்கு, நீதி பெற்று தருவதாக சபதம் எடுத்ததால், சென்னை 16 வது கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். நான்கு ஆண்டுகளுக்கு பின், 2024, டிச.,18 ல் தீர்ப்பு வெளியானது.அந்த தீர்ப்பில், 'குடியிருப்பு பகுதிகளில், செல்லப்பிராணி சிறுநீர், மலம் கழித்தால், உரிமையாளருக்கு அபராதம் விதிப்பது, விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. மேலும், குடியிருப்பு சங்கங்கள், அபராதம் விதிப்பதற்கு, சட்டப்பூர்வ அனுமதி இல்லை. இத்தீர்ப்பு இந்தியா முழுவதும் உள்ள குடியிருப்பு வளாகங்களில் செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு முன்னுதாரணமாக அமைகிறது' என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் நகலை பார்த்து, விலங்கு நல ஆர்வலர்கள், செல்லப்பிராணி வளர்ப்போர் என, பலரும் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.எனக்கு தற்போது 83 வயதாகிறது. என் முதுமைக்காலத்தை, டாபியின் நினைவுகளுடன் கழித்து வருகிறேன். என் டாபிக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக போராடினேன். இது பலருக்கும் பயன்படும் வகையிலான தீர்ப்பாக மாறியதில் மகிழ்ச்சி.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி