பாசத்துக்கு இவன்தான் பாஸ்; கிலிகாரனின் மறுபக்கம்
'வேங்கை மவன் ஒத்தையில நிக்கேன்... தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே' என்ற தொணியில், ராணுவம், போலீஷ், ரோந்து பணிகளில், தனி ஆளாக நின்று, சொன்ன வேலையை செய்து முடிக்கும், இந்த ஜெர்மன் ஷெப்பர்டை நம்பி, குழந்தையை கூட விட்டுட்டு போகலாம். பாசம் காட்டுவதில் பசுவாகவும், பாய்ந்தால் கிலி ஏற்படுத்தும் புலியாகவும் நடந்து கொள்ளும்,'' என்கிறார் சென்னையை சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்டு ப்ரீடர் தியோபிலஸ்.பெட் லவ்வர்களின் பேவரட் பப்பியான ஜெர்மன் ஷெப்பர்டு குறித்து, இவர் நம்மிடம் பகிர்ந்தவை: ஷெப்பர்டு வெரைட்டியில், ஜெர்மன், அமெரிக்கா, போலந்து, சைபீரியாவில் அதிகம் வளர்க்கப்படுபவை ஜெர்மன் ஷெப்பர்டு தான். ஆரம்ப காலத்தில் இருந்தே, மேய்ச்சலுக்கு பயன்படுத்தியதால், பாதுகாவல் பணிக்கு ஏற்ற பப்பி. இதில், பெண் நாய்கள், அதிக பொறுப்புடன் நடந்து கொள்ளும். மிகவும் புத்திசாலியான பப்பி என்பதால், ராணுவம், போலீஷ், ரோந்து பணிகளுக்கு, அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்கு, அதீத மோப்பத்திறன் இருப்பதால், போதைப்பொருள் கண்டறிதலில் கில்லி போல வேலை செய்யும். இந்த வெரைட்டியில், 'ஒர்க்கிங் ப்ரீடை' பொறுத்தவரை, முதுகு நேராகவும், முன்னங்கால் போன்றே பின்னங்காலும் ஒரே உயரத்தில் இருக்கும். இவ்வகை நாய்களை தான், பாதுகாவலுக்கு பயன்படுத்துகின்றனர். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். தற்போது, வீடுகளில் வளர்க்கப்படும், ஜெர்மன் ஷெப்பர்டு பப்பி, கண்காட்சி நோக்கத்திற்காக, அதன் உடலமைப்பில் சில மாற்றங்களுடன் ப்ரீட் செய்யப்பட்டவை. இவ்வகை பப்பிகளின் உருவ அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கும். பின்னங்கால் சற்று குட்டையாக, முதுகு வளைந்தபடி இருப்பதோடு, ஓநாய் போன்ற முக அமைப்பில், பார்க்கவே அழகாக இருக்கும். பிறந்த இரு மாதங்களிலேயே இதற்கு பயிற்சி கொடுக்கலாம். உரிமையாளர் என்ன வேலை கொடுத்தாலும் உடனே செய்து முடிக்கும். எல்லாரிடமும் எளிதில் நெருங்கி பழகுவதோடு, குழந்தைகளை கூட நம்பி விட்டு செல்லும் அளவுக்கு, விசுவாசமாக நடந்து கொள்ளும். பப்பியின் பின்னங்கால் சற்று குட்டையாக இருப்பதால், வழுக்கும் தரைகளில் வைத்து வளர்த்தால், எலும்புகள் மேலும் வளைந்து, நடக்க முடியாமல் சிரமப்படலாம். இதன் இடுப்பு, பின்னங்கால் மூட்டு பகுதிகள் எளிதில் பாதிக்கப்படுவதால், பராமரிப்பு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். புதிதாக இந்த பப்பி வாங்குவோர், நன்றாக நடக்கிறதா, தோல் மினுமினுப்புடன் இருக்கிறதா, மூக்கு பகுதி ஈரமாக இருக்கிறதா, தொப்புள் பகுதியை சுற்றிலும் அலர்ஜி இல்லாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஜெர்மன் ஷெப்பர்டு பப்பியை பொறுத்தவரை, அதிகபட்சம் 7-- -10 ஆண்டுகள் உயிர்வாழும். ஆனால், ஒவ்வொரு நொடியும் தன்னை சுற்றியிருப்போர் மீது அளவில்லாத அன்பை பொழியும். அதேசமயத்தில், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போல நடந்து கொள்ளும்.