உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே /  கர்ண பரம்பரை!

 கர்ண பரம்பரை!

''அ ன்னார்ந்து வானத்தை நோக்கினால் கடுகு போல சிறுத்து போகும் துாரம் வரை பறக்கும் கர்ண புறா, மீண்டும் உங்கள் வீடு தேடி வந்துவிடும்,'' என்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த புறா ஆர்வலர் துஷ்யந்த். 'மாரி' படத்தில் பந்தயத்திற்காக நடிகர் தனுஷ் வளர்த்த 'கர்ண' புறாவுக்கென மொட்டை மாடியில், பிரத்யேக குடில் அமைத்துள்ளார் துஷ்யந்த். பி.பி.ஏ., முடித்த இவர், புறா வளர்ப்பில் அதீத ஆர்வம் கொண்டவர். கர்ண புறா பற்றி, இவர் நம்மிடம் பகிர்ந்தவை: இந்திய பறவை இனமான கர்ண புறா அதீத ஆற்றலும், நீண்ட துாரம் பறக்கும் திறனும் கொண்டது. பந்தயத்திற்காக பலரும் இந்த இன புறாவை வளர்க்கின்றனர். இது, உரிமையாளருடன் எளிதில் நெருங்கி விடும் என்பதால் செல்லப்பிராணியாக வளர்க்க ஏற்றது. புறா பந்தயத்தின் போது, குறிப்பிட்ட இடத்தில் இருந்து, வான் நோக்கி உயரே பறக்கும் கர்ண புறா, கிட்டத்தட்ட 5 மணி நேரம் வரை தொடர்ந்து ஓய்வின்றி மேல் நோக்கி செல்லும். கடுகு போல சிறுத்து போகும் வரை அது பறப்பதை காணலாம். பின், எந்த இடத்தில் பறக்க ஆரம்பித்ததோ அதே இடத்திற்கு வந்தடையும். எவ்வளவு துாரம் பறந்தாலும், அது வீட்டை மறக்காமல் திரும்ப வந்து சேரும் என்பதே, இதன் தனிச்சிறப்பு. வெள்ளை, கருப்பு மற்றும் வெள்ளை சந்தன நிறத்தில் காணப்படும் கர்ண புறாக்கள் கிட்டத்தட்ட 150 கிராம் எடை கொண்டிருக்கும். இதன் கண்கள், வெள்ளை நிறத்தில் காணப்படும். வீட்டில் உள்ளோரிடம் எளிதில் நெருங்கி பழகும். இது பிறந்து இரு மாதங்களிலே பறக்க ஆயத்தமாகிவிடும். கம்பு, தினை, கேழ்வரகு, கோதுமை, வெள்ளை சோளம், பச்சைப்பயறு விரும்பி சாப்பிடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குடல்புழு நீக்கம் செய்வது அவசியம். இதன் கூண்டை தினசரி சுத்தம் செய்ய வேண்டும். அதீத நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இருப்பினும், குளிர், மழை காலங்களில், பராமரிப்பில் கூடுதல் அக்கறை காட்டுவதுஅவசியம். இப்புறாவை தனியாகவளர்ப்பதை காட்டிலும், கூட்டமாக வளர்ப்பதும், பிற இன புறாக்களுடன் சேர்த்து வளர்ப்பதும் நல்லது. தனியாக இருந்தால், அவை ஸ்ட்ரெஸ் ஆகிவிடும். புறாவுக்கென பிரத்யேக கூண்டு அமைத்து வளர்ப்பதே சிறந்தது. வீட்டை சுற்றிலும் புறாக்கள் வட்டமடிப்பதும், உங்கள் குரல் கேட்டு, தேடி பறந்து வந்து,தோள் மீது அமர்வதும், அதோடுஊர் சுற்றி கதை பேசுவதும் அலாதியான அனுபவமே, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை