உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / தோல் அலர்ஜியா...! வளர்ப்போருக்கும் பரவும்

தோல் அலர்ஜியா...! வளர்ப்போருக்கும் பரவும்

உணவு ஒவ்வாமை, வீரியமுள்ள கெமிக்கல் பொருட்கள், நோய் தொற்று கிருமிகள் என, பல காரணங்களால், செல்லப்பிராணிகளுக்கு தோல் நோய் ஏற்படுகிறது. இதில் ஒவ்வொன்றுக்கும், வெவ்வேறு சிகிச்சைகள் முறைகள் உள்ளன.கெமிக்கல் வாயிலாக அலர்ஜி ஏற்படும் போது, அடிவயிற்றில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றும். செல்லப்பிராணிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும், சில உணவுகளாலும், தோலில் அலர்ஜி ஏற்படும். உணவு சாப்பிட்ட சில மணி நேரங்களில், தோலில் சிவப்பு நிற சிறிய புள்ளிகள் தோன்றும். இச்சமயங்களில், அந்த உணவை தவிர்ப்பதோடு, மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை எடுத்து கொண்டால், ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய் தொற்று கிருமிகள், உடலில் ஈரம் தங்குதல் போன்ற காரணங்களாலும், தோல் நோய்கள் ஏற்படுகின்றன. பாக்டீரியாவால் தோலில் அலர்ஜி ஏற்பட்டால், வெள்ளை நிற திரவம் வெளியேறுதல், உடலில் துர்நாற்றம் வீசுதல், சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.2,000க்கும் மேற்பட்ட பூஞ்ஜை வகைகள் இருப்பதால், அறிகுறிகளுக்கு ஏற்ப, சில ஆய்வு முடிவுகள் அடிப்படையில் தான் சிகிச்சையை துவங்க முடியும். இதில், பொதுவாக அதிகம் பரவும், பூஞ்சை தொற்றாக இருப்பது, 'ரிங்வெர்ம்' எனப்படும் தோல் நோய். இது, தோலில், தடித்த, வட்ட வடிவில் தோன்றும். உடனே கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.பொதுவாக செல்லப்பிராணிகளுக்கு தோலில் அலர்ஜி ஏற்பட்டால், அதிக முடி உதிர்வு, அரிப்பு, உடலை அடிக்கடி உரசி கொள்வது, கீறி கொள்வது போன்ற வேறு சில அறிகுறிகளும் ஏற்படும்.இச்சமயங்களில், வீட்டில் பிற செல்லப்பிராணி இருந்தால், அவைகளுடன் பழக விடாமல் தனியாக வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை குளிப்பாட்டுதல், இருக்குமிடத்தை சுத்தப்படுத்துதல், அது பயன்படுத்திய பொருட்களை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். கால்நடை மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம். தோல் நோய் குணமாகி, மூன்று வாரங்களுக்கு பிறகே, மற்ற செல்லப்பிராணிகளுடன் பழக விட வேண்டும்.இணையதளத்தில் கிடைக்கும் தகவல் அடிப்படையில், சிலர் 'சுய மருத்துவம்' செய்து, தொற்றின் வீரியத்தை அதிகப்படுத்திவிடுகின்றனர். இதில் அலட்சியம் காட்டினால், தோல் அழுகிவிடும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.மேலும், செல்லப்பிராணிகளிடம் இருந்து தோல் நோய் தொற்றுக்கிருமி, மனிதர்களுக்கும் பரவும். பாதிக்கப்பட்ட நாய், பூனையை தொடும் போது, அதன் பொருட்களை பயன்படுத்திய பிறகு, உங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அதன் முடி உங்கள் மீது பட்டாலும், 'ரிங்வெர்ம்' எனும் வட்ட வடிவில் தோல் அலர்ஜி, உங்களுக்கு ஏற்படலாம். உடனே, தோல் நோய் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.குழந்தைகள், கர்ப்பிணிகள், உடல்நிலை சரியில்லாததாவர்கள், தோல்நோயால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது அவசியம். முறையான சிகிச்சை, சத்தான உணவு, தகுந்த பராமரிப்பு முறைகளை பின்பற்றினால், உங்கள் செல்லப்பிராணியைதோல் நோய் தொற்றில் இருந்து, முழுமையாக குணப்படுத்த முடியும்.- டாக்டர் எம். தரணி,உதவி பேராசிரியர், கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், உடுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை