உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே /  தெருவில் கிடந்த வசந்தம்!

 தெருவில் கிடந்த வசந்தம்!

பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில், முதன்மை அறிவியலாளராக பணியாற்றுகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு மழைக்காலத்தின் மதிய வேளையில், எங்கள் வளாகத்தில், ஒரு அட்டைப்பெட்டிக்குள் மூன்று பூனைக்குட்டிகளை யாரோ விட்டு சென்றனர். பசியால் அவை கத்த ஆரம்பித்த பிறகு தான் பெட்டியில் இருந்து வெளியே எடுத்தோம். ஓரிரு மணி நேரத்திலே அதில் இரு குட்டிகள் இறந்துவிட்டன. கடைசியில் மிஞ்சிய ஒரு வெள்ளைப் பூனையை அனைவரும் கைவிட்ட நிலையில் வேறு வழியின்றி வீட்டிற்கு கொண்டுவந்தேன். செல்லப்பிராணி வளர்த்த அனுபவம் இல்லாததால் ஆரம்பத்தில், பூனைக்கு எதை உணவாக தர வேண்டுமென கூட தெரியாது. பின் ஒவ்வொரு நாளும் ஒரு புதுவிஷயத்தை தேடி அறிந்தேன். இப்போது அதற்கு வயது 5. கிருஷ்ணா பகத் என பெயரிட்டுள்ளோம். நானும், அம்மாவும் தனியாக வசிக்கிறோம். எங்கள் இருவருக்கான துணை கிருஷ்ணா தான். வேலை முடித்து,வீட்டிற்குள் அடியெடுத்த வைத்த அடுத்தநொடி, இவனின் குரலில் கரைந்துவிடுவேன். வேலை சார்ந்த மன அழுத்தம், பொருளாதார சிக்கல்கள், உடல்நிலை என எல்லாவற்றிலும் இருந்து மீள, எனக்கு உந்துதலை ஏற்படுத்தியது இவன் தான். தவமின்றி கிடைத்த வரம் என்றால், அது கிருஷ்ணா தான். தெருவில் ஆதரவின்றி விடப்பட்ட ஒரு பூனையால், என் வாழ்வில் எத்தனை விஷயங்கள் மாறிவிட்டன என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.வாழ்வின் வசந்தங்களை ஏற்படுத்த எப்போதும் தேவதுாதர்கள் நேரில் வருவதில்லை. ஆதரவற்ற விலங்குகள் மீது கரிசனம் காட்டுங்கள். அவைகள்உங்களுக்கான தேவதைகளாகவும் இருக்கலாம். - தீபா பகத், வாசகர், பெங்களூரு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ