வேல்ஸ் கோர்கிற்கு இப்படியொரு பெருமை
இ ங்கிலாந்து இரண்டாம் எலிசெபத் ராணி, இறக்கும் வரை தன்னுடன் வைத்திருந்த வேல்ஸ் கோர்கி பப்பி பற்றி, கூடுதல் தகவல்களை நம்மிடம் பகிர்ந்தார் ஊட்டி, கூடலுார் பகுதியை சேர்ந்த ப்ரீடர் விஜயக்குமார். அவர் கூறியதாவது: வேல்ஸ் கோர்கி பப்பியின் பூர்வீகம் அமெரிக்கா; சிறிய வகை பப்பி. அதிகபட்சம் 32 செ.மீ., வளரும். கிட்டத்தட்ட, 12-17 கிலோ எடை கொண்டிருக்கும். உடலமைப்பை அடிப்படையாக கொண்டு, பெம்புறுக் வேல்ஸ் கோர்கி மற்றும் கார்டிகன் வேல்ஸ் கோர்கி என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. வால் இல்லாத, வட்டமான காது, வலுவான எலும்புகளை கொண்டிருந்தால் கார்டிகன் வகை என்றும், கூரிய முனை கொண்ட காதுகளுடன் சிறிய வால் கொண்டிருந்தால் பெம்புறுக் வகை என்றும் வேறுபடுத்துவர். இவ்விரு வகை பப்பிகளும் அளவில் சிறியதாக, அதீத துடிப்புடன் இருப்பதால், ஆடு உள்ளிட்ட மந்தை விலங்குகளை காவல் காக்க அந்தகாலத்தில் பயன்படுத்தியுள்ளனர். பெரிய வகை விலங்குகளை விட சத்தமாக குரைத்து, அசாதாரண சூழலில் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கும். அதீத சுறுசுறுப்பாக இருப்பதால் முறையாக பயிற்சி அளிப்பது அவசியம். புத்திசாலியான பப்பி என்பதால் எளிதில் கற்று கொள்ளும். குழந்தைகளுடன் எளிதில் நெருங்கிவிடும். அதீத அன்பையும், விசுவாசத்தையும் காட்டும். அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டிருப்பதால் நம் நாட்டில் இதை வீட்டுக்குள் வைத்து மட்டுமே வளர்க்க வேண்டும். தோட்டம், வெளியிடங்களில் வைத்து வளர்த்தால் வெப்பத்தை தாங்கி கொள்ள முடியாமல் அவதிப்படும். மென்மையான முடிகளே இருப்பதால், பராமரிப்புக்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருக்காது. இதன் காது பகுதியை மட்டும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மற்றபடி, எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாகாது. கிட்டத்தட்ட 12-15 ஆண்டுகள் உயிர்வாழும். தன் எஜமானுக்காக எதையும் செய்ய துணியும் அளவுக்கு அன்பை அள்ளித்தரும். எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பதால், ஒரு குழந்தை வீட்டிலிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இரண்டாம் எலிசெபத் ராணி, தன் 18 வது வயதில், 'சூசன்' என பெயரிடப்பட்ட, பெம்புறுக் வேல்ஸ் கோர்கி இன பப்பியை தன் முதல் செல்லப்பிராணியாக வளர்த்தார். அதனிடம் இருந்து கிடைத்த அளவில்லாத அன்பால் இறக்கும் வரை, கோர்கி வகை பப்பிகளை தன்னுடன் வைத்திருந்தார். இவரது அரண்மனையில், 30 க்கும் மேற்பட்ட வேல்ஸ் கோர்கி பப்பிகள் இருக்கும். அதற்கென ராஜ உபசரிப்பும், தனி அறையும் ஒதுக்கப்பட்டிருக்கும் என வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இப்பப்பியுடன் ராணி இருப்பது போன்ற பல புகைப்படங்களை இணையதளத்தில் காணலாம். பெரும்பாலும் இவ்வகை பப்பிகள், கென்னல் கிளப் ஆப் இண்டியா அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சான்றிதழ் இணைத்தே விற்கப்படுகிறது. ஒரு மாத பப்பியின் விலை, 50 ஆயிரத்தில் இருந்து சில லட்சங்கள் வரை உள்ளது, என்றார்.