செல்லப்பிராணிகளை யாராவது தாக்கினால்?
பென்னி ஒரு விலங்கு பிரியர். தெருநாய்கள் மீது அவர் காட்டும் கரிசனத்தை பொறுக்க முடியாமல் அவரின் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சிலர், அடிக்கடி சண்டை போடுவதுண்டு. பென்னியின் செயலுக்கு முட்டுக்கட்டை போட, அவரின் செல்லப்பிராணியை தாக்க அவர்கள் முடிவெடுத்தனர்.ஒருநாள் பென்னி, வீட்டிலில்லாத சமயத்தில், அவரின் செல்லப்பிராணியை, வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும், 'ஏர் ரைபிள்' துப்பாக்கி கொண்டு தாக்கியுள்ளனர். அது வலியால் துடித்து இறந்துவிட்டது. வீட்டிற்கு திரும்பிய பென்னியால் தாங்கி கொள்ள முடியவில்லை. இச்சூழலில் இவர் என்ன செய்திருக்கலாம்...?போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து சட்ட ரீதியாக தண்டனை வாங்கி தருவதே சிறந்த முடிவாக இருக்க வேண்டும்.அதற்கு உங்களுக்கு உதவக்கூடிய, விலங்குகளுக்கு ஆதரவான சட்டங்கள்: செல்லப்பிராணி உட்பட எந்த விலங்கு பாதிக்கப்பட்டாலும், உடனே அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து, 'எப்.ஐ.ஆர்.,' பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் புகாரில் சந்தேகிக்கும் படியான நபரின் பெயர், தொலைபேசி எண், முகவரி, அவர் ஏற்கனவே செல்லப்பிராணியை அடித்தல், துன்புறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தால் அதற்கான புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும் சம்பவம் நடந்த பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி., கேமரா இருந்தால் அதன் வீடியோ பதிவுகள், புகைப்படங்கள், சாட்சியங்களுடன் புகார் அளிக்க வேண்டும். சில சமயங்களில் காவல்துறையினரிடம் போதிய ஒத்துழைப்பு இருக்காது. அச்சமயங்களில், விலங்கு நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகள், தன்னார்வலர்கள் உதவியுடன், சமூக வலைதளங்களில், இப்பிரச்னை பற்றி பதிவிடலாம். இதன் வாயிலாக, அப்புகாரை பதிவு செய்ய வேண்டிய, கட்டாய சூழலை ஏற்படுத்தலாம் ஆபத்தை ஏற்படுத்த கூடிய ஆயுதங்கள் கொண்டு தாக்கியிருந்தால், உடனே பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 11ல், விலங்குகளை கொல்வது சட்டவிரோதமானது என குறிப்பிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 428 மற்றும் 429 இன் கீழ், ஒரு விலங்கை கொடுமைப்படுத்துவது குற்றமாகும் இதேபோல், அதிக சுமை ஏற்ற விலங்குகளை பயன்படுத்துதல், அடித்தல் போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டால், புகார் அளிக்கும் பட்சத்தில், அவ்விலங்கை மீட்டு, மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புவதோடு, சம்பந்தப்பட்ட நபர் மீது, விலங்கு வன்கொடுமை தடுப்பு சட்டம், பிரிவு 35ல் கீழ், வழக்கு பதிவு செய்து, தண்டனை பெற்று தர முடியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தும் வரை, நீங்கள் அளித்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பது அவசியம் நீதிமன்றத்தில் விசாரணை நடக்க தொடங்கிவிட்டால், சட்டம் தன் கடமையை செய்ய ஆரம்பிக்கும். விலங்கு நலனுக்கு ஆதரவாக சட்டங்களும், விதிகளும் இருக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்காக,மனிதர்களாகிய நாம் தான் போராட வேண்டும். நீதி பெற்று தர வேண்டும்.ஒரு வழக்கின் தீர்ப்பு, பொது அறிவிப்பாக, நீதிமன்றம் வெளியிடும் போது, உங்கள் முயற்சியால் எண்ணற்ற ஜீவன்களின் வாழ்வு, வளமாகிவிடும்.- பபிதாராஜ், வழக்கறிஞர் மற்றும் நிறுவனர், 'மாத்வராஜ் அனிமல் கேர் டிரஸ்ட்' உடுப்பி, கர்நாடகா.