உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / செல்லமே / நாம் எங்கே இருக்கிறோம்?

நாம் எங்கே இருக்கிறோம்?

வளர்ந்த நாடுகளில், செல்லப்பிராணிகளுக்கு ஆதரவாக உள்ள சட்டங்கள், விதிமுறைகள் குறித்து, கனடாவில் வசிக்கும் சர்வதேச நாய் பயிற்சியாளர், கார்த்திக் முருகேசன். நம்மிடம் பகிர்ந்தவை:

உங்களை பற்றி?

என் பூர்வீகம், தேனி மாவட்டம், போடிநாயக்கனுார். கோவை தனியார் மருத்துவ கல்லுாரியில், கடந்த 2007 வரை, பிசியோதெரபி துறை பேராசிரியராக பணியாற்றினேன். கனடாவில் குடியேறி, 18 ஆண்டுகள் ஆகின்றன. இங்கே பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறேன். கனடாவில், ஒன்டாரியோ மாநிலத்தில், கிங்ஸ்டன் என்ற ஊரில் தற்போது வசிக்கிறேன். செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் இருந்ததால், என் பப்பிக்கு பயிற்சி அளிக்க முடிவெடுத்தேன். இதற்காக சர்வதேச நாய் பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பு முடித்தேன். என் பப்பிக்கு (காளி) அளித்த பயிற்சியில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 'காளியும் நானும்- டாக் ட்ரைனர் தமிழ்' (Kaaliyum Naanum Dog Trainer Tamil) என்ற பெயரில், சமூக வலைதளங்களில், பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறேன்.

கனடாவில் செல்லப்பிராணி வளர்க்க விதிமுறைகள் இருக்கிறதா?

ஆம். இங்கே விலங்கு நலன் சார்ந்த சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. பப்பியை இனப்பெருக்கம் செய்வதற்கான விதிமுறைகள் உள்ளதால், 'கனடியன் கென்னல் கிளப்'பால் அங்கீகரிக்கப்பட்ட ப்ரீடர்கள், முறையான ஒப்பந்தம் செய்த பிறகே, பப்பியைவிற்கின்றனர். பிறந்து எட்டு வாரங்களுக்கு பிறகே வாங்கவோ, விற்கவோ முடியும். பப்பி வாங்குபவரின் குடியிருப்பு பரப்பளவு, அதில் எந்த வகையான பப்பியை வளர்க்க முடியும், ஏற்கனவே பப்பி வளர்த்திருக்கிறாரா, அது இறந்திருந்தால் அதற்கான காரணம் என்ன போன்ற தகவல்களை, ஒப்பந்த படிவத்தில் குறிப்பிட வேண்டும். இதேபோல ஒரு பப்பியை விற்கும் முன் அதற்கு மைக்ரோ சிப் பொருத்துதல், தடுப்பூசி போடப்பட்டதற்கான அட்டவணை, பப்பிக்கு ஏதேனும் மரபு ரீதியான நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறதா, அதன் பெற்றோர் நிலை குறித்த தகவல்களும் படிவத்தில் கட்டாயம் குறிப்பிட்டிருக்க வேண்டும். மரபு ரீதியான நோய் பாதிப்பு இல்லாத பப்பிகளை மட்டுமே இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த வேண்டுமென்ற விதிமுறையும் உள்ளது. இங்கே தெருநாய்கள் இல்லை.

செல்லப்பிராணிகளின் நலன் சார்ந்த சட்டங்கள் பற்றி....

கனடாவில் உள்ள மாநிலங்கள், சில சட்டங்களை தனியாக வகுத்துள்ளன. தவிர, கனடாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான விலங்கு நல சட்டங்களும் இருக்கின்றன. குறிப்பாக, இங்கே 'லீஷ்' அணிவிக்காமல், வெளியே அழைத்து செல்ல கூடாது. அப்படி அழைத்து செல்வதை பார்த்தாலோ, அவை யாரையாவது கடித்தாலோ, புகார் அளிக்கலாம். வீடியோ ஆதாரங்கள் சமர்பிக்கலாம். குறிப்பிட்ட பப்பியை பறிமுதல் செய்வதோடு, அதன் உரிமையாளருக்கு 6 மாதம் முதல், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் கனடியன் டாலர் வரை அபராதமும் (நம்மூர் மதிப்பில், ரூ.6 லட்சம்) விதிக்கப்படும். செல்லப்பிராணியை முறையாக கவனிக்காமல் தெருவில் விடுதல், உணவு, மருத்துவ தேவைகளை நிறைவேற்றாமல் இருத்தல், அடித்தல், துன்புறுத்துதல், இதனால் அவை இறந்ததாக உறுதி செய்யப்பட்டால், வாழ்நாள் முழுக்க செல்லப்பிராணி வளர்க்க, அக்குறிப்பிட்ட நபருக்கு தடை விதிக்கப்படும். இதோடு, 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் டாலர் (ரூ 30 லட்சம்) வரை அபராதம் விதிக்கப்படும்.

விலங்கு நலனில் இந்தியா எப்படி இருப்பதாக கருதுகிறீர்கள்?

வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், 10 மடங்கு பின்தங்கியுள்ளது. இந்தியாவில், தெருநாய்கள், நாட்டு நாய்கள் அதிகம். அவை அந்த தட்பவெப்ப சூழலுக்கானவை. அவற்றை தத்தெடுப்பது, பராமரிப்பது, அதன் நலனில் அக்கறை காட்டுவது போன்ற பணிகளில், அரசு இன்னும் தீவிரமாக களமி றங்க வேண்டும். விலங்கு நலன் சார்ந்த சட்டங்களையும், தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும். உணவு, பாதுகாப்பான சூழல், பராமரிப்பு ஆகிய மூன்று தான், செல்லப்பிராணிகளின் அடிப்படை தேவை. இதை பூர்த்தி செய்ய,ஒவ்வொரு தனிநபரும், அரசுடன் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ