வழக்கமாக டூ வீலரில் வரும் மித்ரா, காரை எடுத்துக் கொண்டு சித்ராவின் வீட்டின் முன் நிற்க, ஆச்சரியத்துடன் காரின் முன் பகுதியில் ஏறிய சித்ரா, ''என்ன மித்து! திடீர்னு கார்ல வந்துட்ட...!'' என்று கேட்க, ''டூ வீலர்ல போனா, அடிக்கிற வெயிலுக்கு மயக்கமாகி, அப்புறம் ஆம்புலன்ஸ்லதான் திரும்ப வரணும்!'' என்று சிரித்தாள்.அதை ஆமோதித்த சித்ரா, ''நம்ம ஊருல ஜி.எச்.,ஆம்புலன்ஸ்ல போகணும்னு நினைச்சாலே மயக்கமாயிரும்!'' என்று நிறுத்திய சித்ரா, மித்ரா வேகமாகத் திரும்பியதைப் பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்...''ஆமா மித்து! நம்ம ஜி.எச்.,ல தினமும் 15 டூ 20 போஸ்ட் மார்ட்டம் நடக்குது. அந்த பிரேதங்களை கொண்டு போறதுக்கு கவர்மென்ட்ல இலவச அமரர் ஊர்தி சேவை ஏற்பாடு பண்ணிருக்காங்க. பேருதான் இலவச அமரர் ஊர்தி. அந்த வண்டிகள்ல டிரைவர்கள் வச்சதுதான் சட்டம்... துாரத்தை வச்சு, ஆயிரத்துல இருந்து 5 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கேக்குறாங்க. இல்லேன்னா ஆம்புலன்ஸ் நகராது!''''அங்குள்ள ஒருத்தரு கங்காணியா இருப்பாரே... அவருக்கு இதெல்லாம் தெரியாதா?''''நல்லாக்கேட்டியே...வாங்கச் சொல்றதே அவர் தானாம்... ஒரு டிரிப்புக்கு ஆயிரம் ரூபா அவருக்குக் கொடுத்துறணுமாம்...'அதுக்கு மேல எவ்வளவு வேணும்னாலும் நீங்க வாங்கிக்கோங்க'ன்னு டிரைவர்களுக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறாராம்...இதுவரைக்கும் கைகட்டிட்டு இருந்த டிரைவர்கள், இப்போ தைரியமா வசூல் பண்றாங்க....பாவம் இல்லாதப்பட்டவுங்க ரொம்பவே நொந்துக்கிறாங்க!''''இலவசம்னு இந்த கவர்மென்ட் கொடுக்குற எல்லாமே இந்த லட்சணத்துலதான் இருக்கு...சிட்டிக்குள்ள பல ரூட்கள்ல சாதா பஸ்சே ஓடுறதில்லை...சிகப்பு பஸ்ல, ரெண்டு மடங்கு அதிகமா காசு கொடுத்துதான் லேடீஸ் போக வேண்டியிருக்கு!''''ஆனா இல்லாதவுங்கள்ட்டயும் காசு பறிக்கிறதும் லேடீஸ்தான்; சவுத் தாலுகா ஆபீஸ்ல இருக்குற ஒரு லேடி ஆபீசர், சாதிச்சான்று, உதவித்தொகைன்னு எதுன்னாலும் துட்டு இல்லாம, பேனாவை எடுக்குறதே இல்லியாம். காசு கொடுத்தா, எந்த பைல்லயும் கையெழுத்துப் போடுவாங்களாம். இல்லேன்னா, 'எலக்சன் கோடு ஆப் காண்டாக்ட்' இருக்குன்னு கிடப்புல போட்டுர்றாங்களாம்!''''எலக்சன்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வந்துச்சுக்கா...இந்த எலக்சனுக்கு வேலை பாக்கிறதுக்கு, சட்டசபை தொகுதி வாரியா 'டெம்ப்ரவரி'யா ஆளுகளை எடுத்திருக்காங்க...கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு இந்த மாதிரி 12 லேடீஸ்களை வேலைக்கு எடுத்து, நார்த் தாலுகா ஆபீசு, விமன்ஸ் பாலிடெக்னிக், ஜி.சி.டி.,ன்னு பல இடங்கள்ல டூட்டி போட்ருக்காங்க!''மித்ரா சொல்லும்போதே, ''அதுல என்ன பிரச்னை?'' என்று சித்ரா குறுக்கிட, 'முழுசாக் கேளுங்க' என்று அதே மேட்டரைத் தொடர்ந்தாள் மித்ரா...''அப்பிடி வேலைக்கு வந்த ஒரு பொண்ணை நார்த் தாலுகா ஆபீஸ்ல ரெக்கார்டு டூட்டி பாக்குற ஒருத்தரும், அதே ஆபீஸ்ல இருக்குற டிரைவர் ஒருத்தரும் அடிக்கடி சீண்டிட்டே இருந்திருக்காங்க...அந்தப் பொண்ணு, ஆபீசர்ட்ட கம்பிளைண்ட் பண்ணிருக்கு. ஆனா அவரு கண்டுக்கவே இல்லை...கடைசியில...!''''கடைசியில...!''''ஜி.சி.டி.,யில நைட் டைம்ல அந்தப் பொண்ணுகிட்ட ரெண்டு பேரும் மோசமா நடந்துக்கிட்டதை டெபுடி தாசில்தார் ஒருத்தரே பார்த்துட்டாராம். விசாரிச்சப்போ எல்லா விஷயத்தையும் அந்தப் பொண்ணு சொல்லி, கதறி அழுதுருக்கு...ரெண்டு பேரையும் கடுமையா அவரு 'வார்ன்' பண்ணிருக்காரு...ரெண்டு பேரும் கால்ல விழுந்து 'எங்க வேலை போயிரும்'னு மன்னிப்புக் கேட்டாங்களாம்!''''பண்ற தப்பையும் பண்ணிட்டு, கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டா சரியாயிருமா...!''''ஆமாக்கா! இப்போ அந்த விவகாரத்தை அப்பிடியே மூடி மறைச்சிட்டாங்க...!''மித்ரா சொன்னதைக் கேட்டு முகம் சிவந்த சித்ரா, அதே கோபத்தோடு தொடர்ந்தாள்...''பல பொண்ணுங்களுக்கும் பிரச்னை...சில பொண்ணுங்களாலயும் பிரச்னை....நம்ம ஊருல இருக்குறதே ஒரே ஒரு ஸ்டேடியம்...குட்டீஸ்கள்ல இருந்து, இன்டர்நேஷனல் லெவல்ல விளையாடப் போறவுங்க வரைக்கும், எல்லாரும் இங்கதான் 'பிராக்டீஸ்' பண்றாங்க...தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்புல, ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு 'கோச்'சும் போட்ருக்காங்க!''''ஆமாக்கா...அத்லெட், பாஸ்கெட் பால், வாலிபால், புட்பால்னு எல்லாத்துக்குளே தனித்தனியா கோச் இருக்காங்க...பிரைவேட் கோச், பெரிய பிளேயர்ஸ் எல்லாருமே வந்து பயிற்சி கொடுக்குறாங்க...அங்க பிராக்ட்டீஸ் பண்றதுக்கு பசங்ககிட்ட பணமும் வாங்குறாங்களே...இப்போ அதுல என்னாச்சு?''''ஸ்போர்ட்ஸ் அதாரிட்டியில இருக்குற லேடி கோச்சுங்க சில பேரு, மத்த கோச் எல்லாரையும் அதிகாரம் பண்றாங்களாம்... சீக்கிரமே, ஸ்டேட், நேஷனல் அத்லெட் போட்டிகள் நடக்கப்போகுது...ஆனா 'இங்க பிராக்ட்டீஸ் பண்ணக்கூடாது'ன்னு துரத்துறாங்களாம்...அதுலயும் ஒரு 'கோச்'சை ஸ்டேடியத்துக்கு உள்ளேயே வரக்கூடாதுன்னு ஆர்டர் போட்ருக்காங்களாம்!''''இருக்குறதே ஒரு இடம்...அங்கயும் பிராக்டீஸ் பண்ணக்கூடாதுன்னா எங்கதான் போவாங்க...இதெல்லாம் நம்ம தமிழக இளவரசர் கவனத்துக்குப் போகுதா இல்லையா?''''அது தெரியலை மித்து...ஆனா நம்ம ஊருல இருக்குற ஆளுங்கட்சி பாளையத்துக்காரங்களை எல்லாம் கூப்பிட்டு, நம்ம மன்னர் விசாரிச்சிருக்காரு...!''''நம்ம ஊருல இருக்குற மூணு மாவட்டங்களையும் கூப்பிட்டு, சி.எம்., விசாரிச்சதைத்தான சொல்றீங்க... நானும் கேள்விப்பட்டேன்... 'கோவையில அண்ணாமலை ஜெயிச்சிருவார்னு உளவுத்துறையில ஒரு தரப்பு ரிப்போர்ட் போட்ருக்காங்க... நீங்கள்லாம் என்ன வேலை செஞ்சீங்க'ன்னு காய்ச்சி எடுத்துட்டாராம்...யாரு வேலை பார்க்கலை, உள்ளடி வேலை பார்த்தது யாருன்னு ரிப்போர்ட் கேட்ருக்காராம்!''''அப்போ தேர்தல் முடிவைப் பொறுத்து, பல பேருக்கு சீட்டு கிழியும்னு நினைக்கிறேன்...ஆளும்கட்சிக்காரங்க கிட்ட உளவுத்துறைக்காரங்க ஒரு 'சர்வே' நடத்துனதா எனக்குத் தகவல் வந்துச்சு...பூத்வாரியா எவ்வளவு ஓட்டு பதிவாச்சு, அதுல எவ்வளவு ஓட்டு தி.மு.க.,வுக்கு வரும்னு ஒரு சர்வே எடுத்திருக்காங்க!''''ஓ! தேர்தல் முடிவுக்கு முன்னாடியே எவ்வளவு ஓட்டு வாங்குவோம்னு 'மைக்ரோ லெவல்'ல கணக்குப் போடுறாங்களோ...!''''அதில்லை மித்து! இது வேற கணக்காத் தெரியுது...கொடுத்த பணம் ஒழுங்காப் போய்ச் சேரலைன்னு தெரிஞ்சு, ஆளும்கட்சி தலைமையில இருந்து அதை விசாரிக்கச் சொல்லிருக்காங்க...உதாரணமா, கோவைப்புதுார்ல தி.மு.க., தோத்துப்போன ஒரு வார்டுல, வாக்காளர்களுக்குக் கொடுக்குறதுக்குக் கொடுத்த 45 லட்ச ரூபாயில 30 லட்சத்தை ஆட்டையப் போட்டுட்டதா ஒரு தகவல் மேல போயிருக்கு!''''சூப்பரப்பு...! கொடுத்த பணத்துல 'டூ தேர்டு' லவட்டிட்டாங்களா....!''''ஆமாப்பா...அது கொஞ்சம் மேல்தட்டு மக்கள் வசிக்கிற ஏரியா...அங்க ஓட்டுக்கு யாரும் பணம் வாங்க மாட்டாங்க... அதே மாதிரி அ.தி.மு.க., ஓட்டு அதிகம். இந்த முறை, பல வீடுகள்ல பி.ஜே.பி.,ஸ்டிக்கர் தென்பட்டதால, 'கொடுத்தும் வேஸ்ட்'ன்னு முடிவு பண்ணி அந்த வார்டு 'மாஜி' கவுன்சிலரும், பகுதிக் கழகத்துல இருக்குற நிர்வாகியும் சேர்ந்து 30 லட்சத்தை அப்பிடியே அமுக்கிட்டாங்களாம்!''''பணம் கொடுத்து பதவி வாங்குறவுங்க, அதை இந்த மாதிரி நேரத்துலதான எடுக்கப் பார்ப்பாங்க.... கவுண்டம்பாளையம் ஏரியாவுல கட்சி அடையாள அட்டையே இல்லாதவருக்கு ஆளும்கட்சியில பகுதி நிர்வாகியா நியமிச்சிருக்காங்களாம்...அதைப் பார்த்துட்டு, 'பழைய கட்சிப் பாசம் போகலையா'ன்னு உடன்பிறப்புகளே சோஷியல்மீடியாவுல உறுமி வாசிச்சிருக்காங்க!''மித்ரா பேசிக் கொண்டிருக்கும்போதே, மண் பிளாஸ்க்கில் இருந்த நன்னாரி சர்பத்தை டம்ளரில் ஊற்றிக் குடித்த சித்ரா, வண்டியை ஓரம் கட்டச் சொல்லி, மித்ராவுக்கும் ஒரு டம்ளர் கொடுத்தாள். கார் கவுண்டம்பாளையம் பாலத்தில் ஏறும்போதே, இடது புறமிருக்க உயர்ந்த ஹவுசிங் போர்டு கட்டடங்களைப் பார்த்துக் கொண்டே, மித்ரா பேசினாள்...''அக்கா! இந்த குவாட்டர்ஸ்ல 1,848 வீடுகள் இருக்கு...தண்ணிப் பிரச்னை, குப்பைப் பிரச்னை, காம்பவுண்ட் இல்லை, பாதுகாப்பில்லைன்னு ஏகப்பட்ட பிரச்னை...இப்போ புதுசா உள்வாடகைப் பிரச்னை முளைச்சிருக்கு!''''என்னது... உள் வாடகையா...?'''' உண்மைதான்க்கா...முந்தா நாளு நைட்டு ரெண்டு மணிக்கு, 20, 25 வயசுள்ள ஏழெட்டுப் பசங்க, முழு போதையில பயங்கர சத்தம் போட்டுட்டே உள்ள வந்துருக்காங்க. அத்தனை பேரும் இந்திப்பசங்களாம்... சத்தம் கேட்டு, சங்க நிர்வாகிகளும், மத்த வீட்டுக்காரங்களும், அந்தப் பசங்க போன 'டி' பிளாக்ல 'செக்' பண்ணிருக்காங்க. அங்க, குட்டியூண்டு வீட்டுக்குள்ள எட்டுப் பேரு இருந்திருக்காங்க!''''அது அரசு அலுவலர் வாடகைக் குடியிருப்புதான...அவுங்க எப்பிடி வந்தாங்க?''''ரெண்டாயிரம் ரூபாய் வாடகைக்கு கவர்மென்ட் கொடுத்த வீட்டை வாங்கி, தலைக்கு ரெண்டாயிரம்னு 16 ஆயிரம் ரூபாய்க்கு உள்வாடகைக்கு விட்ருக்காங்க. அந்தப் பசங்க தினமும் போதையில பக்கத்துல வீட்டுக்காரங்ககிட்ட தகராறு பண்றாணுங்க... இது மாதிரி நிறைய அலுவலர்களுக்குக்கு கொடுத்த வீடுகளை உள்வாடகைக்கு விட்ருக்காங்க...நேத்து கலெக்டருக்கு கம்பிளைண்ட் போயிருக்கு!''சொல்லி முடித்த மித்ரா, காரை பெட்ரோல் பங்க் உள்ளே திருப்ப, இருவரும் பேச்சுக்கு இடைவெளி விட்டனர்.