உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா... மித்ரா ( கோவை) / துப்புரவு பணியாளர்களை ஆத்திரமூட்டிய கேலி!

துப்புரவு பணியாளர்களை ஆத்திரமூட்டிய கேலி!

வீ ட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருந்தாள் சித்ரா. காபி கோப்பையை நீட்டிய மித்ரா, ''என்னக்கா, ரொம்ப நாளைக்கு அப்புறம், நம்மூருக்கு பழைய மினிஸ்டர் செந்தில்பாலாஜி வந்திருந்தாராமே...'' என, பேச்சை ஆரம்பித்தாள். ''ஆமாப்பா...ஸ்டேட் லெவல்ல நடந்த, ஆளுங்கட்சி இன்ஜினியர்கள் அணி கூட்டத்துல கலந்துக்கிறதுக்கு வந்தாரு. வட்ட லெவல்ல நிர்வாகிகள் நியமிக்கணும்; அப்படி செஞ்சா, 12 ஆயிரம் பேருக்கு போஸ்ட்டிங் கட்சி பதவி கொடுக்கலாம். எலக்சன் ஒர்க் செய்றதுக்கு ஒத்தாசையா இருக்கும்னு, யோசனை சொல்லியிருக்காரு,'' ''பூத் கமிட்டியோட இணைஞ்சு 'ஒர்க்' பண்ணணும். ஒவ்வொரு தொகுதியிலயும் அஞ்சு பூத் கமிட்டியை அவுங்க பொறுப்புல எடுத்து, கூடுதல் ஓட்டு வாங்கணும்னும் 'அட்வைஸ்' பண்ணியிருக்காரு. 2026 அசெம்ப்ளி எலக்சன்ல, மேற்கு மாவட்டங்கள்ல ஜெயிச்சுக் காட்டணும்னு சொல்லியிருக்காரு,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா. ஆளுங்கட்சிக்குள் சலசலப்பு ''இதே கூட்டத்துல திருச்சி சிவாவும் கலந்துக்கிட்டாரு. அவரு, த.வெ.க., விஜய் பேரை சொல்லாம, 'புதுசு புதுசா காளான்கள் முளைக்கும்; எச்சரிக்கையா இருக்கணும்'னு பேசுனாரு,'' ''சலசலப்பு ஏற்பட்டுச்சுன்னு கேள்விப்பட்டேனே...'' ''அதுவா, மாவட்ட நிர்வாகி ஒருத்தரு, அரசு பதவி கொடுக்கணும்னு, மேடையில வெளிப்படையா பேசுனாரு; கூட்டத்துல கலந்துக்கிட்டவங்க விசில் அடிச்சு வரவேற்பு கொடுத்தாங்க. சூழலை புரிஞ்சுக்கிட்ட செந்தில்பாலாஜி, தலைமைக்கும், முதல்வர் கவனத்துக்கும் கொண்டு போயி, அரசு பதவி கொடுக்கறதுக்கு உறுதி கொடுத்திருக்காரு,'' ''அதில்லைக்கா... கருங்காலின்னு பேசுனாங்களாமே...'' ''ஆமா...திருச்சிக்காரரு அப்படி பேசியிருந்தாரு... பேச்சுக்கு இடையே, 'வரலாற்றை திரும்பிப் பார்த்தால், மிக வலிமையான, திறமையான, மக்களின் ஆதரவு பெற்ற மன்னர்களுக்கு கூட, சில நேரங்களில் வேறு மாதிரியான முடிவுகள் ஏற்பட்டிருக்கு. அதே இனத்துல இருக்கற கருங்காலி அல்லது துரோகின்னு, யாரோ ஒருத்தர் மூலம் நடந்திருக்கு. இந்த நிலைதான் நம்ம தமிழ்நாட்டுலயும் இருக்கு; எச்சரிக்கையா இருக்கணும்'னு பேசுனாரு. யாரை துரோகி, யாரை கருங்காலின்னு சொன்னாருன்னு, ஆளுங்கட்சி வட்டாரத்துல பரபரப்பா பேசிட்டு இருக்காங்க,'' மனைவிக்காக... ''பூண்டி வெள்ளியங்கிரி கோவில் அறங்காவலர் குழுவுல ஏதாச்சும் பிரச்னை இருக்குதா...'' ''பிரச்னை எதுவும் இல்லப்பா. குழு மேம்பரா, தொண்டாமுத்துார் யூனியனை சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஒய்பை நியமிச்சிருக்காங்க. குழு கூட்டத்துக்கோ, ஆய்வுக்கோ அவரு வர்றதில்லையாம். அவருக்கு பதிலா, வீட்டுக்காரரு கலந்துக்கிறாராம். இதெல்லாம் உடன்பிறப்புகள் மத்தியில சலசலப்பை ஏற்படுத்தியிருக்குது,'' ''இதாவது பரவாயில்லைக்கா, கவர்மென்ட் ஸ்கூல்ல சில அமைப்புகள் பெயரில, பங்சன் நடத்துறோம்னு ஆளுங்கட்சி, திராவிட இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிங்க தொந்தரவு அதிகமாகிட்டு வருது. சம்பந்தப்பட்ட அமைப்புகாரங்க அவங்களோட ஒப்பினியனை, ஸ்டூடன்ட்ஸ்கிட்ட திணிக்கிறாங்க. அதே மாதிரி, பொய் கருத்துக்களை கொண்ட புத்தகங்களையும் குடுத்துருக்காங்க. கவர்ன்மென்ட் ஸ்கூல்ல பங்சன் நடத்துறதுக்கும், சீப் கெஸ்ட் அழைச்சிட்டு வர்றதுக்கும் ஏகப்பட்ட ரூல்ஸ் விதிக்கிற கவர்மென்டு, ஆளுங்கட்சி, அவுங்க ஆதரவாளர்கள் பங்கேற்கறதுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கறதில்லைன்னு, நடுநிலையாளர்கள் தரப்புல இருந்து வாய்ஸ் கிளம்புது,'' என்றாள் மித்ரா. இலைக்கட்சியினர் அதிர்ச்சி ''தி.மு.க. ஸ்கீம்களை, அ.தி.மு.க.வை சேர்ந்தவங்க பாராட்டுதுனால, அவுங்க கட்சிக்குள்ள புகைச்சல் ஓடிட்டு இருக்குதாமே....'' ''ஆமாக்கா, நீங்க கேட்கறது உண்மைதான். மேட்டுப்பாளையத்துல ஒரு எய்டட் ஸ்கூல்ல, காலை உணவு திட்டம் துவக்குனாங்க. ஆய்வு செஞ்ச அ.தி.மு.க.கவுன்சிலர், புட் நல்லாயிருக்குன்னு டீச்சர்களை பாராட்டிட்டு வந்திருக்காரு. இன்னொரு கவுன்சிலர், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்துறதுக்கு முயற்சி செஞ்சிருக்காரு. இதை கேள்விப்பட்ட ரத்தத்தின் ரத்தங்கள், 'தி.மு.க. ஆட்சிக்கு எதிராக வேலை பார்த்துட்டு இருக்கும்போது, அவுங்க கொண்டு வந்த ஸ்கீம்களை சப்போர்ட் பண்ற மாதிரி நடந்துக்கிறாங்களேன்னு, புலம்பிட்டு இருக்காங்க,'' கரன்சி பட்டுவாடா ''கார்ப்பரேஷன் ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்கு, வழக்கம்போல மாத மாமூல் பட்டுவாடா ஆகிடுச்சுன்னு சொல்றாங்களே...'' ''ஆமா, உண்மைதான்க்கா. கவுன்சில் கூட்டம் நடந்த அன்னைக்கு அழைப்பு வந்திருக்கு. ஒரு 'ல'கரத்துல ஆரம்பிச்சு அஞ்சு 'ல'கரம் வரைக்கும் தகுதிக்கேற்ப பிரிச்சுக் கொடுத்திருக்காங்க,'' ''தெற்கு தொகுதியை கைப்பத்துறதுக்கு, லேடி சேர்மன் 'மூவ்' பண்ணிட்டு இருக்காராமே...'' ''அவரா... மேயர் பதவியை ரொம்ப எதிர்பார்த்தாரு. கடைசி நேரத்துல கை நழுவி போனதுனால, மினிஸ்டர் நேருவுக்கு முன்னாடியே பகிரங்கமா கேள்வி கேட்டு, கட்சி தலைமையை அதிர வச்சார். இப்போ, எம்.எல்.ஏ., சீட் கேட்குறாரு. பரம்பரையையும், ஜாதி அடையாளத்தையும் வச்சு, தொழில்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் மூலமாவும் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, மாணவரணியை சேர்ந்தவரும் போட்டி யில இருக்காரு, பொள்ளாச்சி டாக்டரும் தொகுதிக்குள்ள வலம் வர்றாரு. இவுங்களுக்குள்ள போட்டி பலமா இருக்கறதுனால, யாருக்கு சீட் கெடைக்கும்னு இப்போதைக்கு சொல்ல முடியாது,'' கதர்ச்சட்டை பஞ்சாயத்து ''கதர்ச்சட்டை கட்சியில, ஒரே நேரத்துல மூனு மாவட்ட நிர்வாகிகளையும் மாத்திட்டாங்களே... உள்ளடி வேலை ஏதாச்சும் நடந்துச்சா...'' ''நானும் விசாரிச்சேன். கதர்ச்சட்டை கட்சி மாவட்ட நிர்வாகியை, மூன்றெழுத்து அடைமொழியோட வலம் வர்ற தேசிய நிர்வாகி ஒருத்தரு, தன்னோட கட்டுப்பாட்டுல இயக்குனாரு. மாநிலத்தையே கைக்குள்ள வச்சிருக்கிற நிர்வாகி, நம்ம டிஸ்ட்ரிக் நிர்வாகத்தை அவரோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர்றதுக்கு, ரொம்பவும் மெனக்கெட்டாரு. அவர் 'மூவ்'ல, நம்மூர்ல பெரும்பான்மையா இருக்கற சமுதாயத்தைச் சேர்ந்தவரை, மாநகர் மாவட்டத்துக்கு நியமிச்சிருக்காரு,'' ''புதுசா நியமிக்கப்பட்ட பீளமேட்டை சேர்ந்த நிர்வாகி, கார்ப்பரேஷன் கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்பட்டு சீட் கேட்டிருக்காரு; அவருக்கு சான்ஸ் கொடுக்காததால, சுயேச்சையா போட்டி போட்டு, வார்டுக்குள்ள செல்வாக்கை காட்டியிருக்காரு. ஆளுங்கட்சி தரப்புல 'என்கொயரி' செஞ்சப்போ, கதர்ச்சட்டை கட்சியில இருந்து, 'சீட்' கேட்கவே இல்லைங்கிற விஷயம் தெரிஞ்சது. அப்போ, ஓரங்கட்டப்பட்ட நிர்வாகியை தேடிப் பிடிச்சு, இப்போ மாநகர் மாவட்டத்துக்கே பொறுப்பாளரா நியமிச்சிருக்காங்க. அந்தளவுக்கு அந்த கட்சிக்குள்ள, கோஷ்டி பிரச்னை அனலா கொதிச்சுட்டு இருக்கு,'' துப்புரவாளர்கள் கோபம் ''அது சரி... சாயிபாபா காலனியில துாய்மை பணியாளர்களை, ஆளுங்கட்சி கூட்டணி கட்சி லேடி கவுன்சிலர் ஒருத்தரு, தரக்குறைவா திட்டிட்டாராமே...'' ''அந்த ஏரியாவுல ஸ்பெஷலா துாய்மை பணி நடந்திருக்கு. அ.தி.மு.க.,வை சேர்ந்தவங்க, துாய்மை பணியாளர்களுக்கு டீ, போண்டா வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதைப்பார்த்த லேடி கவுன்சிலர், 'டீ வாங்கிக் குடிக்கக் கூடவா காசு இல்லை'ன்னு நக்கலா கேலி பேசியிருக்காங்க. அதனால, மனசு நொந்த பணியாளர்கள், மறுநாள் அந்த வார்டுல காத்திருப்பு போராட்டம் நடத்தியிருக்காங்க. ஹெல்த் டிபார்ட்மென்ட் ஆபீசர்ஸ் சமாதானம் செஞ்சிருக்காங்க,'' ''அதே வார்டுல, துாய்மை பணியாளர்களை வேற மாதிரி 'டீல்' பண்றதா சொல்றாங்களே...'' ''அதுவா... சுகாதாரப் பிரிவு ஆபீசுக்குள்ள, பப்ளிக்கோ அல்லது வேற யாரு வந்தாலும் செருப்பு போட்டுக்கிட்டு வரலாம். ஆனா, குப்பை அள்ளுற துாய்மை பணியாளர்களா இருந்தா, ஆபீஸ் வாசலுக்கு வெளியே செருப்பை கழற்றி வச்சுட்டு, உள்ளே வரணும்னு ஆர்டர் போட்டிருக்காங்களாம். இது மாதிரி, ரெண்டெழுத்து வார்டு மேற்பார்வையாளர் மேலயும் ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வந்துட்டு இருக்கு,'' கடைக்கு கடை வசூல் ''உளவுத்துறை போலீஸ்காரர் ஒருத்தரு, கடை கடையாய் கலெக்சனை அள்ளுறாராமே...'' ''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன். வடவள்ளி ஏரியாவுல உளவு பார்க்குற நான்கெழுத்துகாரரு மேலதான், அந்த கம்ப்ளைன்ட். ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு விதமா, 'ரேட்' பிக்ஸ் பண்ணியிருக்காராம். இவரைப் பத்தி, போலீஸ் கமிஷனர் கவனத்துக்கு கொண்டு போறதுக்கு, ஸ்டேஷன்ல இருக்கற போலீஸ்காரங்க பிளான் பண்ணியிருக்காங்க,'' என்றபடி, நகர் வலத்துக்கு புறப்பட்டாள் மித்ரா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை