பிளீச்சிங் பவுடர் கொள்முதல்; சாயம் வெளுக்குமா ?
ஆடிப்பெருக்குக்கு கோவிலுக்குப் போன மித்ரா, நேராக சித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள். ''நம்ம மாவட்டத்துல தி.மு.க.வினரை வெளில பார்க்க முடியலக்கா... சாமிநாதன், செல்வராஜ், தினேஷ்குமார், பத்மநாபன்... பெருந்தலைகள் எல்லாரும் அமைதியா இருக்காங்க. ''கட்சில உள்கட்சித்தேர்தல் நடக்கும்னு தகவல் ஓடுது. ஆனா, அதுல அவங்களுக்கே பெருசா விருப்பம் இல்லையாம். ''இப்ப இருக்கிற சூழ்நிலைல நியமன முறையே பாதுகாப்புன்னு நினைக்கிறாங்களாம். இல்லாட்டி கோஷ்டிச்சண்டை அப்பட்டமா வெளியே தெரிஞ்சிடுமோன்னு பயப்படுறாங்க...'' ''அப்படியா மித்து...” ''அது மட்டும் இல்லக்கா... அ.தி.மு.க.ல புதிய மாநகர் மாவட்டச் செயலாளர் வேல்குமார் சாமிநாதன் செம வேகத்துல இறங்கியிருக்காரு. ''கோஷ்டிப்பூசலால ஓரம்கட்டப்பட்ட நிர்வாகிகளை ஒவ்வொருத்தரா சந்திச்சு, மறுபடியும் கட்சிப் பணிக்கு வாங்கன்னு அழைச்சுட்டு இருக்காரு. ''இளைஞர்களுக்கு அதிக பொறுப்பு கொடுக்கணும்னு தலைமை சொல்லியிருக்காம். அதனால சாதாரண பொறுப்புல இருக்கிற இளைஞர்களைக்கூட கூடவே கூட்டிட்டுப் போய், பழனிசாமியை சந்திக்க வச்சு வாழ்த்து வாங்க வைக்கிறாரு. ''ஆனா, இதெல்லாம் தேர்தல் வரைக்கும் தாக்குப்பிடிக்குமா... அதுதான் இப்ப கேள்வி...” வருத்தத்தில் மாஜிக்கள் ''அது சரி... த.வெ.க. பக்கம் என்ன நிலை?” ''வழக்கம்போல சமூக வலைதளத்துலதான் சத்தம் அதிகம். களத்துல அந்த பரபரப்பு தெரியல. ''த.வெ.க.வுல சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் மற்றும் முக்கியமானவங்களைக்கூட நிகழ்ச்சிகளுக்கு பெரிசா கூப்பிடுறதில்லையாம். ''உள்ளாட்சித் தேர்தலை நம்பி வேற கட்சியிலிருந்து வந்தவங்க எல்லாம்... 'நாம சரியான இடத்துக்குத்தான் வந்தோமா?'ன்னு இப்ப யோசிக்கிறாங்களாம்...” சித்ரா சிரித்தாள். ''சரி... ஈஸ்வரன் கோவில் பாலம் கதையைக் கேட்டியா?” ''பா.ஜ.வினர் போராட்டம் அறிவிச்சதும், பாலத்தைத் திறக்க தடபுடலா ஏற்பாடு நடக்குது... இதை பா.ஜ. காரங்க தங்களோட வெற்றின்னு சொல்லிக்கிறாங்களாம்.” மித்ரா புன்னகைத்தாள். ''முதல்லயே திறக்கணும்னுதான் மாநகராட்சி திட்டமிட்டிருந்தாங்களாம். ''ஆனா, 'நாங்க போராடினதாலதான் திறந்தாங்க'ன்னு சொல்லிக்கிட்டு சந்தோஷப்படுறதுக்கு யாரும் தடை போட முடியாதுல... இதை விட பெரிய கதை ஊத்துக்குளி போலீஸ் ஸ்டேஷன்லதான்...” ''என்னாச்சு?” தப்பிய தலைகள் ''அடுத்தடுத்து நடந்த இரண்டு பெரிய விபத்துல... உடலை ஒப்படைக்கிறதுல இருந்து ஒவ்வொரு வேலைக்கும் காசு இல்லாம எதுவும் நகரலையாம். ''அலுவலக போனையே எடுக்க மாட்டாங்களாம். ஏதாவது தகவல் கேட்டா, ஆவணத்தையே ஒளிச்சி வைக்கிற வேலையும் நடந்திருக்காம். ''விஷயம் மேலே போனதும் எஸ்.பி. எட்டு பேரை ஊர்க்காவல் படைக்கு துாக்கியடிச்சாரு. ஆனா, எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர்னு பெருந்தலைகள் மீது நடவடிக்கை இல்லையேன்னு கேள்வி எழுந்திருக்கு...” ''அது எப்பவும் நடக்குற கதையாச்சே... பெரியவங்க தப்பிச்சுடுவாங்க...” ''மித்து... விளைநிலங்கள்ல எண்ணெய்க் குழாய் பதிப்புக்கு எதிரா போராடின விவசாயிகள் மேல வழக்கு போட்டாங்களே... அடுத்த நாளே ஒரு சங்க நிர்வாகியை தனியா துாக்கிட்டுப் போயிட்டாங்களாம். ''விவசாயிகள் ஸ்டேஷனுக்குப் போய்க் கேட்டா... 'எங்களுக்கே தெரியாது'ன்னு கை விரிச்சிருக்காங்க. ''கலெக்டர் ஆபீசையே முற்றுகையிட்டுப் போராடுன பிறகுதான் அவரை வெளியே விட்டிருக்காங்க. ''அவரை பிடிச்ச தகவல் மாவட்ட பெரிய அதிகாரிக்கு உடனே போயிருந்துச்சாம். ஆனா, போராட்டத்துக்குப் பிறகுதான் தெரிஞ்ச மாதிரி நடந்துக்கிட்டாருன்னு விவசாயிகள் கொதிக்கிறாங்க...” ''அது இருக்கட்டும்... மாநகராட்சி பக்கமும் சும்மா இல்லக்கா” ''என்ன புதுசு?” எரியாத விளக்கு ''தெருவிளக்குக்கு டிபாசிட் கட்டி முடிச்சும்... மின்வாரியம் இன்னும் பல இடத்துல விளக்கே போடலையாம். ''மாநகராட்சியும் தட்டிக்கேட்காம அமைதியா இருக்கு. ஏன்னு தெரியுமா? ''மின்வாரிய இடங்கள்ல சில இடங்களில் மாநகராட்சி குப்பை கொட்டியிருக்காம். இதைக் கிளறினா அதையும் வெளியே எடுத்துடுவாங்கன்னு பயந்துதான் அமைதியா இருக்கிறாங்களாம்...” ''கவுன்சிலர்களும் சும்மா இல்ல... பார்க்கிங் வளாக ஏல முறைகேடு பற்றி போன கூட்டத்துல புயலைக் கிளப்புனாங்களே... இந்தக் கூட்டத்துல அதைப் பத்தி ஒருத்தர்கூட வாய் திறக்கல. ''சிலர் கூட்டத்துக்கே வரல. வந்தவங்கள்லயும் பலர் பாதியிலேயே கிளம்பிட்டாங்க. ''பேச எதுவும் இல்லையா... இல்ல பேசினா பயனில்லையா... அதுதான் யாருக்கும் புரியல...” கட்டுப்போட கட்டணம் ''இதெல்லாம் பரவாயில்லக்கா... அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைல நடக்கிற கதையைக் கேட்டா இன்னும் அதிர்ச்சியாவீங்க...” ''என்ன விஷயம்?” ''விபத்துல காயமடைஞ்சு வர்றவங்களுக்கு கட்டுப் போடுற இடத்துலதான் வசூல்வேட்டை ஜோராம். காயம் எப்படி இருக்குன்னு பார்த்து, நுாறுல இருந்து இருநுாத்து ஐம்பது ரூபாய் வரை வாங்குறாங்களாம். ''ஒருத்தர்ட்ட யு.பி.ஐ. மூலமா காசு வாங்கின விவகாரம் நேரா முதல்வர் தனிப்பிரிவு வரைக்கும் போயிருச்சு. அதுக்கப்புறம் டீனும் உயர் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட டாக்டர்கள், அலுவலர்களை மூணு மணி நேரம் விசாரிச்சிருக்காங்க. ''எந்நேரமும் பணிநீக்க உத்தரவு வரலாம்னு சிலர் பதற்றத்துல இருக்காங்க. அதனால மத்த வார்டுல இருக்கிறவங்களும் ஒரு வாரமா ரொம்ப அடக்கமா வேலை பார்க்கிறாங்களாம்...” ''ஹாஸ்பிடல் மட்டும் இல்ல... ரயில்வே ஸ்டேஷன்லயும் வேற கதை ஓடுதே...” ''என்ன கதை?” கருப்பு ஆடுகள் ''வடமாநிலத்திலிருந்து வர்ற தொழிலாளர்களை குட்கா சோதனைன்னு தனியா கூட்டிட்டுப் போறாங்களாம். பையில இருக்கிறதை எல்லாம் வெளியே காட்டினாலும்... 'கையில இருக்கிறதை கொடுத்துட்டு போ'ன்னு பணம் வாங்கிட்டுத்தான் அனுப்புறாங்களாம். ''பிழைக்க வந்த இடத்துல, உள்ளே நுழையவே கப்பம் கட்டுற நிலை. ரயில்வே போலீஸ்ல இருக்கிற இந்தக் கருப்பு ஆடுகளை களையெடுப்பாங்களான்னு பார்க்கலாம்...” ''அது சரி... பஞ். யூனியன் அலுவலகங்கள்லயும் ஒரு புலம்பல் ஓடுதே...” ''என்னவாம்?” ''ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், தாங்கள் சொல்ற கடையிலதான் பிளீச்சிங் பவுடர், பிளம்பிங் சாமான்கள் வாங்கணும்னு பி.டி.ஓ.க்களை கட்டாயப்படுத்துறாங்களாம். விலை அதிகமா இருந்தாலும் வேற வழியில்லாம வாங்கிட்டு இருக்காங்க. ''அதிக கமிஷன் கிடைக்கிற இடத்துலதான் வாங்கணும்னு மறைமுக அழுத்தமாம். ''உள்ளாட்சித் தேர்தல் சீக்கிரம் வந்துட்டா இந்தத் தொல்லையாவது முடியும்'ன்னு சில பி.டி.ஓ.க்களே புலம்புறாங்களாம்...” ''சரி... இன்னிக்கு இது போதும்... வா... காபி குடிக்கலாம்...” காபி போட சித்ரா எழ, மித்ரா, 'தினமலர்' நாளிதழை வாசிக்க ஆரம்பித்தாள்.