உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சித்ரா...மித்ரா (திருப்பூர்) / சித்ரா - மித்ரா பட்டாசா வெடிக்குது பார் வசூல் விவகாரம் புஸ்வாணமாச்சு இன்ஸ்பெக்டர் அதிகாரம்

சித்ரா - மித்ரா பட்டாசா வெடிக்குது பார் வசூல் விவகாரம் புஸ்வாணமாச்சு இன்ஸ்பெக்டர் அதிகாரம்

'பட்டாசு வாங்கப் போகணும்...'' எனச் சொல்லியவாறே, மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா. ''அக்கா... நீங்க மத்தாப்பு, புஸ்வாணம், சங்குச்சக்கரம்தான வெடிப்பீங்க... ஆனா, கார்ப்பரேஷன்ல, அதிரடியா 'டைம்பாம்'மே வச்சிருக்காங்க... ஆபீசர்ஸ் அலர்றாங்க...'' ''ஒவ்வொருத்தருக்கும் ஒன்னுல இருந்து அஞ்சு லட்சம் வரைக்கும் டார்கெட். வழக்கமா டார்கெட் வைக்காமத்தான் தீபாவளி வசூல் வேட்டை நடக்கும். ''எலக்ஷன் நெருங்கறதால, வழக்கமா கொடுக்குறவுங்க தொகையை அதிகப்படுத்திக் கேட்குறாங்களாம். அவங்க மனசு குளிர குளிரக் கொடுக்கிறதுக்கு 'சிட்டி டாடி' முடிவெடுத்துட்டாராம். தீபாவளி வசூலுக்காகவே ஸ்பெஷல் கூட்டம் நடந்துச்சாம்'' சிரித்தாள் மித்ரா. ''மித்து... இன்னொரு வசூல் மேட்டர் சொல்றேன். அ.தி.மு.க., ஆட்சில டாஸ்மாக் பார்காரங்க ஒவ்வொருத்தரும் 50 ஆயிரம் ரூபா, ஆளும் கட்சிக்காரங்களுக்கு கப்பமா கட்டிட்டு வந்தாங்களாம். ''இப்ப ரேட்டு ஒன்னு முதல் ஒன்னரை லட்சம் வரைக்கும் உசந்துருச்சு'' ''ஆளும்கட்சி வடக்கு மாவட்டத்து முக்கிய நிர்வாகிக்கும், வடக்கு நகர முக்கிய நிர்வாகிக்கும் சுத்தமாக ஆகலே... மாவட்ட முக்கிய நிர்வாகி பார்காரங்களைக் கூப்பிட்டு மீட்டிங் போட்டாராம்... ''மாசாமாசம் பகுதி வட்ட நிர்வாகியான 'ராமர்' வந்தார்னா 'கப்பத்தை' எடுத்து வச்சிரணும்... சின்ன வட்ட நிர்வாகிகளுக்குத்தான் 'கப்பம்' போகப்போகுது... ''வடக்கு நகர முக்கிய நிர்வாகிட்ட இனி 'கப்பம்' கட்ட வேண்டியதில்லன்னு மாவட்ட முக்கிய நிர்வாகி சொல்லீட்டாராம். ''பார் ஏலத்துல பிரச்னை வந்தாலும் நான் பார்த்துக்கறேன்னுட்டாராம். இது தெரிஞ்சவுடனே நகர முக்கிய நிர்வாகி 'ஷாக்' ஆயிட்டாராம்'' ''சித்ராக்கா... வசூல் 'தாதா' மாதிரி மாவட்ட முக்கிய நிர்வாகி ஆயிட்டாரே... இவரு பேரை இவரே கெடுத்துக்குவாரு போல... ''வசூல் மன்னர்கள்தான் கட்சிப்பதவில உசந்து நிக்கிறாங்க... வேற வழியில்லன்னு இப்படி அதிரடியா களமிறங்கிட்டாரு போல... ஆனா இந்த விவகாரம் ஆளும்கட்சிக்குள்ளயே பட்டாசா வெடிக்கப்போகுதுன்னு சொல்றாங்க'' மித்ரா ஆதங்கப்பட்டாள். பற்றியது 'நெருப்பு' ''மித்து... இன்னொரு பார் மேட்டர் சொல்றேன் கேளு... கார்ப்பரேஷன் லிமிட்ல, 'நெருப்பு' பேர் கொண்ட ஏரியால ஒரு பார் இருக்கு. அதே ஏரியால மனமகிழ் மன்றம் ஒன்னு துவங்கப்போறாங்களாம். இதனால பார்ல கூட்டம் குறைஞ்சுரும்னுட்டு பல்வேறு கட்சிக்காரங்க துணையோட பெட்டிஷன் போட பார்காரரு ஏற்பாடு பண்ணியிருக்காரு... ''இதுல பிரதானக் கட்சிக்காரரு ஒருத்தரு, எல்லாரும் கையெழுத்துப்போட்டதால நானும் போட்டேன். எனக்கு மனமகிழ் மன்றம் வர்றதுல ஆட்சேபனை இல்ல... ஆள விடுங்க சாமின்னு போலீஸ்ட்ட சொன்னாராம். ''இருந்தாலும் இந்தப்பிரச்னை நெருப்பு மாதிரி பத்திக்கிச்சு... எதுல போயி முடியும்ன்னுதான் தெரியல'' சித்ரா நீட்டி முழக்கினாள். லகரங்கள் 'லபக்' ''அக்கா... திருப்பூர்ல ஆர்க்கெஸ்ட்ரா நடக்கப்போறதாவும், பிரபல பாடகி வர்றதாகவும் விளம்பரம் பண்ணியிருந்தாங்க... ''இதுக்கு பெரிய ஆளுங்கள ஸ்பான்சர் பிடிச்சு 'ல'கரங்கள்ல வசூல் நடந்துருச்சு... டிக்கெட்டும் வித்திருக்காங்க... ''கரூர் சம்பவத்தைக் காரணம் காட்டி, நிகழ்ச்சியை கேன்சல் பண்ணீட்டாங்களாம். அதிர்ந்து போன ஸ்பான்சர்காரங்க, 'ல'கரங்களை வசூல் பண்ணுன ஆசாமிக்குப் போன் போட்ருக்காங்க... ஆசாமி போனை எடுக்கலையாம்'' ''லகரங்கள் முதலை வாய்க்குள்ள போயிருச்சுன்னு சொல்லு மித்து'' கலகலத்தாள் சித்ரா. சீட் யாருக்கு? ''மித்து... சட்டசபைத் தேர்தல்ல திருப்பூர் தெற்குல போட்டி போடுறதுக்கு அ.தி.மு.க.,ல போட்டா போட்டியாம். பல்லடம் 'வி.ஐ.பி'யா மாறுன 'ஆனந்தம்' தனக்குத்தான் 'சீட்'னு ஒத்தக்கால்ல நிக்கிறாராம். ''சமீபத்தில திருப்பூருக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி வந்தப்பா வரவேற்புச்செலவுக்கு மட்டும் 30 'எல்' செலவு பண்ணியிருக்காராம்'' ''ஏன்க்கா, பல்லடம் தொகுதிதானே, 'ஆனந்தம்' நிக்கிறதுக்கு சேப்டியானது'' ''நீ சொல்றது கரெக்ட்தான் மித்து. ஆனா, அங்கு 'செ.ம' தான் போட்டி போடுவார்ன்னு சொல்றாங்க. அவரை எதிர்த்து சீட் கேட்க முடியாதுன்னு நெனைச்சு திருப்பூர் தெற்குக்கு ஜாகையை மாத்தீட்டாராம்'' அம்பலப்படுத்தினாள் சித்ரா. ''அக்கா... 'பாளையம் - முத்தணம்' கோவில்ல கும்பாபிேஷகம் முடிஞ்சு 90 நாளாச்சு... அன்னதான கமிட்டி வசூல் செஞ்ச கணக்கை ஒப்படைச்சுட்டாங்க... மீதி 65 லட்சம் ரூபாய் கைவசம் இருக்காம். தனியே இடம் வாங்கி, அறக்கட்டளை நடத்தலாம்னு திட்டம் போட்டிருக்காங்க. ''ஆனா, கும்பாபிேஷக விழா கணக்கை அறங்காவலர் குழு இன்னும் அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கலையாம். ''இதுக்கு இடையில, 9ம் தேதி உண்டியல் திறக்க ஏற்பாடு செஞ்சிருக்காங்க... அன்னதானக்குழு காரங்க கடுமையா எதிர்த்திருக்காங்க. கும்பாபிேஷக விழா கணக்கை முதல்ல தாக்கல் செய்யட்டும்; அதுக்குள்ள உண்டியல் திறக்கறதுக்கு என்ன அவசரம்? பதவி முடிய ஒன்னரை மாசம்தான் இருக்குன்னு எகிறிட்டாங்களாம். ''இப்ப உண்டியல் திறப்பைத் தள்ளிவச்சிட்டாங்களாம்'' ரகசியத்தை உடைத்தாள் மித்ரா. அதிகாரிகள் புலம்பல் ''மித்து... முதலிபாளையம் கிராம சபாவை மக்கள் புறக்கணிச்சுட்டாங்கள்ல... ஊரக வளர்ச்சி மாவட்ட அதிகாரிகள் நேர்ல வந்து சமாதானம் செஞ்சும் உடன்பாடு ஏற்படல... ''மாநகராட்சி குப்பை கொட்டறாங்க; நிறுத்தியாச்சு... ஆனா, கொட்டுன குப்பையை அகற்றணும்னா நாங்க என்ன பண்ண முடியும்? ''கோரிக்கையைத் தீர்மானமா நிறைவேத்தலாம்னு சொல்லியும், விடாப்பிடியா கிராம சபாவை மக்கள் புறக்கணிச்சுட்டாங்களாம்… இதுக்கு மேல நாங்க என்ன பண்ண முடியும்'னு ஆபீசர்ஸ் புலம்புறாங்களாம்'' ஆசை யாரை விட்டது? ''அக்கா... 'கொங்கு' ரோடு பகுதில டாஸ்மாக் பார்ல வேலை செய்ற நபரை, பார் மூடியிருக்க வேண்டிய டைம்ல, மதுபாட்டில் விற்றதா க்ரைம் இன்ஸ்பெக்டரு அரெஸ்ட் பண்ணியிருக்காரு. ''இந்த விவகாரத்துல சம்பந்தமே இல்லாமல், திடீர்னு இன்ஸ்பெக்டரு மூக்கை நுழைச்சிருக்காரு... வேலை செஞ்சவரை தாக்கினதோட, பறிமுதல் செஞ்ச பணத்தையும் கணக்கு காட்டலேன்னு குற்றச்சாட்டை முன்வைச்சு, பார்காரங்க, வீடியோவை வைரல் ஆக்கிட்டாங்க. ''விசாரிச்சப்ப, இந்த பார்ல, விதிமுறை மீறி, மது விக்கத்தான் செய்றாங்க... ஆனா, க்ரைம் இன்ஸ்பெக்டர் போனப்ப, உண்மையிலயே மது விக்கலையாம். ஆனாலும் சில பாட்டில்களை பறிமுதல் செஞ்சமாதிரி செட்டப் பண்ணி அரெஸ்ட் பண்ணியிருக்காரு. பறிமுதல் செஞ்ச பணத்தையும் கணக்குல காட்டிட்டாராம். இதனால பெரிசா பிரச்னை பரவாம ஓய்ஞ்சுருச்சு. ''உண்மைல நடந்தது என்னன்னா, சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டருக்கு பார்காரங்க 'கப்பம்' கட்டுறாங்க... எனக்கும் ஏன் 'கப்பம்' கொடுக்கக்கூடாதுன்னு க்ரைம் இன்ஸ்பெக்டர் கேட்டாராம். பார்காரங்க கொடுக்கல... சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் லீவு போட்ட நேரத்துலபோய், க்ரைம் இன்ஸ்பெக்டர் தன்னோட அதிகாரத்தைக் காட்டிட்டார் போல. ஆனா, இது புஸ்வாணமா போகும்ன்னு அவருக்கு மொதல்ல தெரியல. ஆசை யாரை விட்டது?'' ''இதெல்லாம் 'அரசியல்'ல சகஜம்தானே மித்து'' ஆர்ப்பரித்தாள் சித்ரா. ''மித்து... குண்டடம் லிமிட்ல பனியன் ஏத்திட்டு போன சரக்கு வாகனம் மோதி ஆட்டுக்கு காயம் ஏற்பட்டுச்சு. மக்கள் வாகனத்தை முற்றுகையிட்டாங்க. எஸ்.ஐ., விசாரிச்சு, ஒருதலைபட்சமா பஞ்சாயத்து செஞ்சதா ஒரு வீடியோ வைரலாச்சு... ''உயரதிகாரிகள்ட்ட விசாரிச்சப்ப, 'எல்லாம் உண்மைதான். ஆனா ரெண்டு தரப்பிடமும் சமாதானமா பேசி முடிச்சாச்சு. சில ஆயிரத்தை சம்பந்தப்பட்டவங்க, பாதிக்கப்பட்டவங்களுக்கு 'ஜிபே'ல அனுப்பியிருக்காங்க... அதோட பிரச்னை முடிஞ்சுது... ஆனா, வீடியோ வந்ததால, கூடுதல் பரபரப்பு ஏற்பட்டிருச்சு. அவ்ளோதான் மேட்டர் அப்படீன்னு சொல்றாங்க'' மித்ரா நகைத்தாள். ''சித்ராக்கா... ஸ்ரீநகர்ல, ரோட்டுல இருக்கிற மின் கம்பியை உயர்த்துறதுக்கும், மின்கம்பத்தை மாத்துறதுக்கும் ரெண்டு லட்சம் செலவாகும்னு மின் வாரியத்துல கேட்ருக்காங்க... இதை தொழிலதிபர் ஒருத்தரே கட்டிட்டாரு. ஆனாலும், லஞ்சம் கறக்கற நோக்கத்துல மின் கம்பிகளை உசத்தவே இல்ல. பொதுமக்கள் போராட்டத்துக்கு தயாரா அந்த ஏரியாவுக்குப் போயிட்டாங்க... ''அப்ப பார்த்து ஒரு கன்டெய்னர் லாரி மின் கம்பியில உரசுற மாதிரி வந்திருக்கு... பின்னால் நின்ற நபர் லாரியை பின்னால ஒரு தட்டு தட்டியிருக்காரு... மக்களும் ஓடியிருக்காங்க... 'கரன்ட் ஷாக் அடிச்சிடும்... ஓரமா போங்கன்னு சத்தம் போட்டு உசுரை காப்பாத்திட்டீங்க'ன்னு லாரி பின்னாடி தட்டுன நபரைப் பார்த்து மக்கள் கையெடுத்து கும்பிட்டாங்களாம்... ''இப்ப நல்ல வேளையா, மின் கம்பியை உயரமா மாத்திட்டாங்க'' அரண்ட அதிகாரிகள் ''மித்து... மாவட்டத்துல, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, சார் பதிவாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ன்னு தீபாவளி வசூலுக்காக போலி நிருபர் கும்பல் ஒன்னு கார்ல சுத்திட்டு இருக்குதாம். ரெண்டு நாள் முன்னாடி ஒரு அதிகாரிட்ட 25 ஆயிரம் ரூபாய் தரணும்ன்னு ஒத்தைக்கால்ல நின்னாங்களாம்... முடியலேன்னு சொன்னவுடனே, 'பாருங்க ஆபீசர்... உங்களைப் பத்தி அவதுாறா செய்தி வரும்; அப்புறம் வருத்தப்படாதீங்க'ன்னு சொல்லீட்டு கெளம்பீட்டாங்களாம்... இந்தக் கும்பலை கண்டு சில ஆபீசர்ஸ் அரண்டு போயிருக்காங்களாம். ''நேர்மையான ஆபீசர்ஸ்தான் கெத்து... மடியில கனமில்லை; வழியிலயும் பயம் இல்லைன்னு இவங்களை 'பேஸ்' பண்ணா தில்லா இருக்காங்களாம்'' ''நீங்க சொல்றது சரிதாங்க்கா...'' ஆசுவாசப்பட்டாள் மித்ரா. இருவரின் பார்வையும், 'தினமலர்' நாளிதழில் வெளியான பட்டாசு குறித்த கட்டுரைக்குத் தாவியது; எதை வாங்கலாம் என்பதை அறிய, கட்டுரையில் மூழ்கத் துவங்கினர். ''மாசாமாசம் பகுதி வட்ட நிர்வாகியான 'ராமர்' வந்தார்னா, பார்காரங்க 'கப்பத்தை' எடுத்து வச்சிரணும்... சின்ன வட்ட நிர்வாகிகளுக்குத்தான் 'கப்பம்' போகப்போகுது... வடக்கு நகர முக்கிய நிர்வாகிட்ட இனி 'கப்பம்' கட்ட வேண்டியதில்லன்னு மாவட்ட முக்கிய நிர்வாகி சொல்லீட்டாராம்'' ''ஒரு அதிகாரிட்ட 25 ஆயிரம் ரூபாய் தரணும்ன்னு ஒத்தைக்கால்ல நின்னாங்களாம்... முடியலேன்னு சொன்னவுடனே, 'பாருங்க ஆபீசர்... உங்களைப் பத்தி அவதுாறா செய்தி வரும்; அப்புறம் வருத்தப்படாதீங்க'ன்னு சொல்லீட்டு டுபாக்கூர் நிருபர் கும்பல் கெளம்பீட்டாங்களாம்...''


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை