மேயர் பகிர்ந்த ரகசியம்; அரசியல் ஆன அதிசயம்
''சித்ராக்கா... வெயில் தலைகாட்டுனாலும் மாநகராட்சில மட்டும் 'புயல்' ஓயாது போல...''மித்ரா 'சூறாவளி' போல் வந்தாள்.''மித்து... நீ ஏன் படபடக்கிற... இன்னிக்கு சொத்து வரி உயர்வைக் கண்டிச்சு, அ.தி.மு.க.,காரங்க உண்ணாவிரதம் இருக்காங்க... தி.மு.க., கூட்டணிக் கட்சிக்காரங்களும் ஆலோசனை நடத்துறாங்க''''ஆமாக்கா... இந்தப் பிரச்னையை விளக்குவதற்காக, மேயர் 'பிரஸ்மீட்' வச்சிருந்தார்ல... அப்போ மைக் 'ஆன்'ல இருக்கிறது தெரியாம, மேயரும், கமிஷனரும் பேசுன வீடியாவை அ.தி.மு.க.,காரங்க வைரல் ஆக்கிட்டாங்க...''மத்திய அரசு வழிகாட்டுதல்படிதான் வரி உயர்த்தப்பட்டுள்ளதா கூறலாம்னு கமிஷனர் யோசனை சொல்றாரு...''ஆனா, மேயர் ஒத்துக்கல... நாங்க ஆட்சில இருக்கேல மத்திய அரசு எங்களையும்தான் வலியுறுத்துச்சு... நாங்க அடிபணியல... ஆனா நீங்க அடிபணிஞ்சிட்டீங்க... அப்படீன்னு அ.தி.மு.க.,காரங்க கேட்பாங்க... அரசு அடிபணிந்தது போல இருக்கும். அதனால அப்படிக்கூற மாட்டேன்னு மேயர் சொல்றாரு...''உதவியாளர் 'அலர்ட்' பண்ணுனதுக்கப்புறம் மேயர் சுதாரிக்கிறார். இந்த வீடியோவை வச்சு, மத்திய - மாநில அரசுகளைத் தாக்கிப் பேசலாம்கறது அ.தி.மு.க.,வோட திட்டம்''''மித்து... மேயருக்கு 'அரசியல்' நல்லா புரிஞ்சிருக்கு... மனசுக்குள்ள வைக்காம போட்டுடைச்சுட்டாரு... அ.தி.மு.க., காரங்க இதை 'அரசியல்' பண்ணலாம்ன்னு புரிஞ்சுக்கிட்டது என்னவோ 'அதிசயம்'தான்... பேஷ்... பேஷ்... ஆனா, இந்த மறியல் போராட்டம்லாம் எப்படி நடந்துச்சு''கேள்வி எழுப்பினாள் சித்ரா. அறிக்கைப்போர்
''சித்ராக்கா... மாநகராட்சி கூட்டத்துல சொத்து வரியைக் கண்டிச்சு அ.தி.மு.க., கவுன்சிலருங்க மேயரை முற்றுகையிட்டாங்கள்ல... உடனே 'ஜெர்க்' ஆன கம்யூ., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிக்காரங்க, திடீர்னு ஐடியா பண்ணி, மறியல்ல குதிச்சுட்டாங்க... இந்த 'ட்விஸ்ட்'ட அ.தி.மு.க.,காரங்க எதிர்பார்க்கல... இதனால அவங்களும் சட்டுன்னு மறியல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.''சொத்து வரி உயர்வுக்கு எதிரா யார் முதல்ல குரல் கொடுத்தாங்கங்கற போட்டிதான் இதுக்கெல்லாம் காரணம்''''மித்து... அ.தி.மு.க., காரங்களோட போராட்டம் குறித்து, மேயர் உடனடியா அமைச்சர் நேருவுக்குத் தகவல் கொடுத்திருக்காரு... உடனே அவர் தரப்பில் இருந்து விளக்கத்தை அறிக்கையா வெளியிட்டிருக்காங்க.''அதுக்கப்புறம்தான் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியோட போராட்ட அறிவிப்போட கண்டன அறிக்கையும் வெளியாகியிருக்கு.''மறியல் செஞ்ச கவுன்சிலர்களை கைது செஞ்சபோது போலீசார் அத்துமீறினாங்கன்னு இ.கம்யூ., எம்.பி., சுப்பராயனும் அறிக்கை வெளியிட்டாரு...''''அறிக்கைப்போர் நடத்தி பிரச்னைய 'போர்' அடிக்காம பாத்துக்கிட்டாங்கன்னு சொல்லுங்கக்கா''தலையசைத்தாள் சித்ரா. போலீஸ் ஆவேசம் ஏன்?
''மித்து... மாநகராட்சி கவுன்சிலருங்க மறியலின்போது போலீஸ் அவ்ளோ ஆவேசமா ஏன் நடந்துக்கிட்டாங்க...''''சித்ராக்கா... மறியலால மங்கலம் ரோட்டுல போக்குவரத்து பாதிச்சுருக்கு... நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கவுன்சிலருங்க ஒத்துக்கல...''''போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இந்தத் தகவல் போயிருக்கு... அதுக்கப்புறம்தான் போலீஸ் அங்க வேகவேகமா போயிருக்காங்க...''இந்தக் கடுப்புதான், இ.கம்யூ., கவுன்சிலர் குழுத் தலைவர் ரவிச்சந்திரனை இன்ஸ்பெக்டர் வலுக்கட்டாயமா இழுத்துட்டு போனதுக்குக் காரணம்ங்கறாங்க''''மித்து... இ.கம்யூ., கவுன்சிலருங்க மறியல்ல ஈடுபட்டுட்டு இருந்தாங்க... ஆனா, இந்தக் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் போராடவே இல்லையே''''சித்ராக்கா... மேயர் 'பிரஸ்மீட்' கொடுத்தப்ப துணை மேயர் 'ஜம்'ன்னு அவரு பக்கத்துல உட்கார்ந்திருந்தாரு... இதைப் பார்த்து 'தோழர்'கள் டென்ஷன் ஆயிட்டாங்களாம்''மித்ரா முகத்திலும் 'டென்ஷன்'. வாரிசு அரசியல்
''சித்ராக்கா... உதயநிதி பிறந்த நாள் விழாவை, ஆளும் கட்சி நிர்வாகிங்க போட்டி போட்டு கொண்டாடறாங்களாம்.''மித்து... உதயநிதியோட 'கடைக்கண் பார்வை' கிடைக்காதாங்கற ஏக்கம்தான் முக்கியக் காரணம்.''இளைஞரணி சார்பில மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குப் பரிசுப்பெட்டகம் வழங்குனாங்களாம். அமைச்சர் வர்றதுக்கு முன்னாடியே பரிசுகளை வழங்கிட்டாங்களாம். அமைச்சர் வந்ததுக்குப் பிறகு, மீண்டும் கொடுக்குற மாதிரி 'செட்டப்' நடந்திருக்கு.''அரசியல்னாலே 'செட்டப்' இல்லாட்டி 'செட்' ஆகாது போல''''ஆனா... இதுல எம்.எல்.ஏ., ஆதரவு கோஷ்டி எட்டிப்பார்க்கலன்றாங்க...''''கோஷ்டி அரசியல்னா இதையெல்லாம் கண்டுக்கக்கூடாது. எம்.எல்.ஏ., இப்ப 'ரிலாக்ஸா' இருக்காராம்.''அவரோட மகனுக்கு வடக்கு மாநகர மாணவரணில பொறுப்பு கொடுத்துட்டாங்களாம்... காத்திருந்ததற்குப் பலன் கெடைச்சிருச்சுன்னு சந்தோஷப்படறாராம்''''வாரிசு அரசியல் தொடருதுன்னு சொல்லுங்கக்கா''''ஆமா... அது இல்லாமயா''சித்ரா சிரித்தாள்.''மித்து... மாநகராட்சில 'கிருஷ்ணன்முத்து'ங்கற ஆளும்கட்சிக்கார கவுன்சிலரோட வார்டுல தள்ளுவண்டிக் கடைக்காரங்ககிட்ட, தினமும் தலா நுாறில் இருந்து 300 ரூபா வரைக்கும் கறந்துடறாங்களாம். வசூல் பண்றவரு கவுன்சிலரோட உதவியாளர் கார்த்திக்.''இந்த விஷயம் கவுன்சிலருக்குத் தெரியுமா... இல்ல தெரிஞ்சும் தெரியாதது மாதிரி இருக்காரான்னு தெரியல...''ஆளும்கட்சிக்காரங்களே இதனால கொதிச்சுப்போயிருக்காங்களாம். உதவியாளருக்கு 'ஆப்பு' வைக்கத் தயாராயிட்டிருக்காங்களாம்''மித்ரா ஆர்வத்துடன் கேட்டாள். போலீஸ் 'அப்செட்'
''சித்ராக்கா... பல்லடம் பக்கத்துல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூனு பேரு கொலை; அவிநாசில வாக்கிங் போனவரு கொலை... அப்படீன்னு தொடர்ச்சியா 'கொலையுதிர்' காலமாயிடுச்சு... அரசியல் கட்சிக்காரங்க, விவசாயிகள் அமைப்புகள்னு போலீஸ் டிபார்ட்மென்ட்ட வெளுத்து வாங்கறாங்க... இதனால போலீஸ் அதிகாரிங்க 'அப்செட்'டா இருக்காங்க. குறிப்பா பல்லடம் ஸ்டேஷன்ல வாகனங்கள், போலீஸ் பற்றாக்குறைன்னு குறைகள் எக்கச்சக்கம். கட்டமைப்பு வசதியே இல்ல. அரசு இனிமேலாவது விழிச்சுக்கணும்''''மித்து... காளைக்குப் பேர் போன ஊருக்குப் பக்கத்து ஊர்ல இருக்கிற ஸ்டேஷனுக்கு குடும்பப்பிரச்னை தொடர்பா அண்ணன், தம்பி புகார் கொடுத்திருக்காங்க... ஒருதரப்பினர் விசாரணைக்கு வரல... அங்கிருந்த போலீஸ்காரர் பொது இடத்துல வச்சு, விசாரிக்க வேண்டிய ஒரு நபரை தாக்கி ஸ்டேஷனுக்கு அழைச்சு வந்திருக்காரு... அந்த நபர் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிட்டாரு...''பிரச்னை பெரிசானதும் போலீஸ்காரருக்கு 'டோஸ்' விட்ருக்காங்க... சம்பந்தப்பட்ட நபர்கிட்ட சமாதானமாப் பேசி பிரச்னைக்குத் தீர்வு கண்டாச்சு...'' பெயர்கள் நீக்கம்
''மித்து... திருப்பூர் மாவட்டத்துல வங்கதேசத்தினர் பதுங்கியிருக்காங்களான்னு தீவிர தேடுதல் வேட்டை நடக்குதுல்ல...''இந்நிலையில், 'என்' வகை ரேஷன் கார்டுகள்ல இருந்து ஐநுாறு பேர் வரைக்கும் திடீர்னு நீக்கப்பட்டிருக்குன்னு சென்னையில் இருந்து கண்டுபிடிச்சிருக்காங்க...''ரகசியமா விசாரணை நடந்திட்டிருக்கு... அது 'தொழில்நுட்பத் தவறு'ன்னு இப்ப சொல்றாங்களாம்... ஆனா விசாரணை முடிஞ்சபிறகுதான் எது உண்மைன்னு தெரியவரும்''''சித்ராக்கா... பள்ளிக்கல்வித்துறை, சுற்றுச்சூழல் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம், ஜெய்வாபாய் பள்ளியில ஏற்பாடு செஞ்சிருந்தாங்க... பல்வேறு பகுதிகள்ல இருந்து வந்த மாணவ, மாணவியருக்கு எதுக்காக ஊர்வலம் போகப்போறோம்னே தெரியல... பதாகைகளைக் கையில கொடுத்து குரூப் போட்டோ எடுத்துக்கிட்டாங்க... 'விழிப்புணர்வு' இப்படி ஊட்டுனா போதுமா?''கேள்வி எழுப்பினாள் மித்து.வெயில் தணியத் துவங்கியிருந்தது. மித்ரா வீட்டுக்குக் கிளம்பினாள்.